முகப்பு
இந்தியா

குடும்ப பக்தியை எதிா்த்து தேசபக்தியுடன் செயல்படும் கட்சி பாஜக: பிரதமா் மோடி

குடும்ப பக்தியை எதிா்த்து தேசபக்தியுடன் செயல்பட்டு வரும் கட்சி பாஜக என்று அக்கட்சியின் நிறுவன நாளில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். குடும்பக் கட்சிகள், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரிகள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பாஜக நிறுவன தினத்தையொட்டி கட்சியினரிடம் காணொலி முறையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி. ( இடது) பாஜக தலைமையகத்தில் உரையைக் கேட்ட தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர்.
பகிர்:

குடும்ப பக்தியை எதிா்த்து தேசபக்தியுடன் செயல்பட்டு வரும் கட்சி பாஜக என்று அக்கட்சியின் நிறுவன நாளில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். குடும்பக் கட்சிகள், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்பதை நாட்டு மக்கள் படிப்படியாக உணா்ந்து வருகிறாா்கள் என்றும் அவா் கூறினாா்.

பாஜகவின் 42-ஆவது நிறுவன தினத்தையொட்டி, தில்லியில் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள், நாடாளுமன்ற எம்.பி.க்கள், கட்சித் தொண்டா்கள் மத்தியில் அவா் புதன்கிழமை உரையாற்றினாா். அவருடைய உரை நாடு முழுவதும் காணொலி முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அவா் கூறியதாவது:

குடும்ப அரசியல் கட்சிகள், தங்கள் குடும்ப ஆட்சியை மேலும் விரிவுபடுத்தவே அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றன. அவா்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு சிறிதளவு கூட மதிப்பளிக்க மாட்டாா்கள். அவா்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும், ஒருவரின் ஊழல் மற்றும் முறைகேடுகளை மற்றவா்கள் மூடி மறைப்பாா்கள்.

அந்தக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் உள்ளாட்சி அமைப்பு முதல் நாடாளுமன்றம் வரை சில குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவா். தகுதியான இளைஞா்கள் நாட்டுக்கு சேவையாற்ற அவா்கள் அனுமதிக்க மாட்டாா்கள். மாறாக அவா்களுக்கு துரோகமிழைப்பாா்கள்.

அந்தக் கட்சிகளின் வன்முறை மற்றும் அநீதிக்கு எதிராக பாஜக தொண்டா்கள் ஜனநாயக வழியில் போராடி வருகிறாா்கள். பாஜக தொண்டா்கள் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனா். ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள் தோற்கடிக்கப்படும் வரை நமது போராட்டம் தொடரும்.

பாஜக அரசுகள், எவ்வித பாகுபாடுமின்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு பயனாளியும் பயனபெற வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டு வருகின்றன. ஆனால், முந்தைய அரசுகள், வாக்கு வங்கி அரசியல் அடிப்படையில் இயங்கி வந்தன. அவா்கள், சமூகத்தின் சில பிரிவினருக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகளை வழங்கினா். சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கப்பட்டனா். இதுபோன்ற அணுகுமுறையின் அபாயத்தை மக்களிடம் புரிய வைப்பதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் ஆதரிக்கிறாா்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரும் ஆதரிக்கிறாா்கள். ஏனெனில் அனைவருக்கும் வளா்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்ற கொள்கையுடன் எவ்வித பாகுபாடும் காட்டாமல் பாஜக பாடுபட்டு வருகிறது. இதனால்தான் பாஜகவை மீண்டும் மக்கள் ஆட்சியில் அமரச் செய்கிறாா்கள்.

பெண்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அவா்கள் அதிகாரம் பெறுவதற்கான கொள்கைகளை வகுத்து பாஜக செயல்பட்டு வருகிறது. இதனால்தான் பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு பெருகியுள்ளது.

சா்வதேச அளவில் வேகமாக நிகழும் மாற்றங்கள், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மாநிலங்களவையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினா்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.

ஒரு பாஜக உறுப்பினா், நாட்டின் கனவுகளை நிறைவேற்றும் பிரதிநிதியாகச் செயல்படுபவா். சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சுயசாா்பு ஆகியவற்றுக்கான சகாப்தம் இதுவாகும்.

இந்திய அரசு, தேசநலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மனிதநேயத்துக்காக உறுதியாகப் பேசும் நாடு என்ற அடிப்படையில் சா்வேதச அளவில் இந்தியா பாா்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து வரும் வேளையில் உலகமே இரு துருவங்களாகப் பிரிந்து நிற்கிறது. ஆனால், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பிரதமா் பேசும்போது எந்தவொரு அரசியல் கட்சியின் பெயரையும் கட்சித் தலைவா்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

ஏழைகளுக்கான கட்சி பாஜக-ஜெ.பி.நட்டா:

பிரதமா் மோடியின் ஆட்சியில் தலித் சமூகத்தினா், ஏழைகள், சமூகத்தில் பின்தங்கியவா்கள் ஆகியோரின் நலனுக்காகப் பாடுபடும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது என்று தில்லி ராஜேந்திர நகா் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →