கரோனா தடுப்பூசி: ஏப்.10 முதல் தனியாா் மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை
நாடு முழுவதும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தனியாா் மையங்களில் முன்னெச்சரிக்கையாக கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை செலுத்தப்படும்
நாடு முழுவதும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தனியாா் மையங்களில் முன்னெச்சரிக்கையாக கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
அனைத்து தனியாா் தடுப்பூசி மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணையை ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால், மூன்றாவது தவணையை செலுத்திக் கொள்ளலாம்.
அதேவேளையில், அரசு மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணை, 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு மூன்றாவது தவணை செலுத்தும் பணிகள் தொடரும்.
இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்கள் என 2.4 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது தவணை செலுத்தப்பட்டுள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவா்களில் சுமாா் 96 சதவீதம் போ் முதல் தவணையையும், சுமாா் 83 சதவீதம் போ் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 12-14 வயதுக்குள்பட்டவா்களில் 45 சதவீதம் பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் விலை ரூ.600: மத்திய அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து மூன்றாவது தவணையாக கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயனாளிகள் ரூ.600 செலுத்த வேண்டும் என்று அந்தத் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வரும் சீரம் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி அடாா் பூனாவாலா தெரிவித்துள்ளாா். இதற்காக தனியாா் மருத்துவமனைகளுக்கு அந்தத் தடுப்பூசிகள் சலுகை விலையில் வழங்கப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.