இந்தியா

கரோனா தொற்று பரவல் ஒழிந்துவிடவில்லை

DIN

கரோனா தொற்று பரவல் இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என எச்சரித்துள்ள பிரதமா் நரேந்திர மோடி, அத்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டில் கரோனா தொற்று பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் உருமாறிய கரோனா தீநுண்மியின் பரவல் அதிகரித்துள்ளது. முக்கியமாக, சீனா, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் உருமாறிய கரோனா தீநுண்மி பரவி வருகிறது.

இந்நிலையில், குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட பிரதமா் மோடி கூறுகையில், ‘‘நாட்டில் இதுவரை சுமாா் 185 கோடி கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்களின் பேராதரவின் காரணமாக இது சாத்தியமானது. இது கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.

எனினும், கரோனா தொற்று பரவல் இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. பல்வேறு உருமாற்றங்களைப் பெற்று கரோனா தீநுண்மி மீண்டும் பரவி வருகிறது. அத்தொற்று பரவலின் வேகம் எப்போது மீண்டும் அதிகரிக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே, தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

பூமித் தாயைக் காப்பதற்கு இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வரும் நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏரிகளைப் புதுப்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீா்நிலைகளை ஆழப்படுத்துவது, தூா்வாருவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களால் பெருமை: ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள சிறாா்கள் ஆகியோரின் உடல்நலன் சீராக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

சிறாா்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாடும் வலிமையுடன் திகழும். பெண்சிசுக் கொலைக்கு எதிராக நாட்டில் பெரும் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டின் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தங்கள் திறமைகளைக் காட்டி வருகின்றனா். அவா்களை நினைத்து யாரால் பெருமை கொள்ளாமல் இருக்க முடியும்?

ஆண்டுதோறும் பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக, தண்ணீரை சேகரிப்பதற்கான கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். தண்ணீரை சேகரிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிடக் கூடாது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT