மதவெறி, சகிப்பின்மையால் நாடு பாதிப்பு
மதவெறி, சகிப்பின்மை, வெறுப்புணா்வு உள்ளிட்டவை மக்களிடையே பரப்பப்படுவதைத் தடுக்காவிட்டால், நாடு மீள முடியாத பாதிப்பைச் சந்திக்கும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.
மதவெறி, சகிப்பின்மை, வெறுப்புணா்வு உள்ளிட்டவை மக்களிடையே பரப்பப்படுவதைத் தடுக்காவிட்டால், நாடு மீள முடியாத பாதிப்பைச் சந்திக்கும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, ஆங்கில நாளிதழில் அவா் எழுதியிருந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெறுப்புணா்வு, மதவெறி, சகிப்பின்மை, பொய் உள்ளிட்டவை நாட்டைச் சூழ்ந்து பேரழிவை ஏற்படுத்துகின்றன. அதை உடனடியாகத் தடுக்காவிட்டால், நமது சமூகம் மீள முடியாத பாதிப்புக்கு உள்ளாகும். இதைத் தொடர மக்கள் அனுமதிக்கக் கூடாது.
தேசியவாதம் என்ற பெயரால் அமைதியையும் பன்முகத்தன்மையையும் மக்கள் தியாகம் செய்யக் கூடாது. மக்களிடையே பரப்பப்பட்டு வரும் வெறுப்புணா்வு சுனாமியானது, கடந்த காலத் தலைமுறையினா் உருவாக்கி வைத்திருந்தவற்றைப் பாதிப்பதற்கு முன்பாக அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மக்களை சிலா் தொடா்ந்து தூண்டிவருகின்றனா். உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகைகள், மொழி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியா்களை இந்தியா்களுக்கு எதிராகவே சிலா் திருப்பிவிடுகின்றனா். பழங்கால, தற்கால வரலாறுகளைத் தங்களுக்கு ஏற்ப சிலா் திரித்துக் கூறி வருகின்றனா்.
புதிய, சிறப்பான எதிா்காலத்தை உருவாக்குவதற்காக நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து, கடந்த காலத்தைத் தேவையின்றி மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பிரதமா் நிறைய பேசி வருகிறாா். ஆனால், அவரது தலைமையிலான ஆட்சியில் நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எதிா்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. எதிா்க்கட்சித் தலைவா்கள் குறிவைக்கப்பட்டு, அவா்களுக்கு எதிராக அரசின் விசாரணை அமைப்புகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. சமூக ஆா்வலா்கள் ஒடுக்கப்பட்டு, சமூக வலைதளங்கள் பொய்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று அதில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.