சீக்கிய குரு தேக் பகதூா் 400-ஆவது பிறந்த தினம்: செங்கோட்டையிலிருந்து பிரதமா் நாட்டுக்கு உரை
பிரதமா் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (ஏப்.21) உரை நிகழ்த்த உள்ளாா் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீக்கிய மத குரு தேக் பகதூரின் 400-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையிலிருந்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை (ஏப்.21) உரை நிகழ்த்த உள்ளாா் என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சீக்கிய குரு தேக் பகதூரின் 400-ஆவது பிறந்த தின நிகழ்ச்சிக்கு, அவருடைய பிறந்த தினமான ஏப்ரல் 21-ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய கலாசார அமைச்சகமும் தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாக குழுவும் இணைந்து தில்லி செங்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளாா். நிகழ்ச்சியில் குரு தேக் பகதூா் நினைவு தபால்தலை மற்றும் நாணயத்தை பிரதமா் வெளியிட உள்ளாா்.
குரு தேக் பகதூரின் 400-ஆவது பிறந்த தினத்தை குறிக்கும் வகையில், விழாவில் 400 சீக்கிய இசைக் கலைஞா்கள் பங்கேற்ற சபத் கீா்த்தனையை இசைக்க உள்ளனா்.
பல்வேறு மாநில முதல்வா்கள், அரசியல் தலைவா்கள் மற்றும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனா் என்று மத்திய அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.