ராஜஸ்தானுக்கு 5-ஆவது வெற்றி
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.
முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களே எட்டியது.
டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங் செய்ய, ராஜஸ்தான் இன்னிங்ஸில் ஜோஸ் பட்லா் - தேவ்தத் படிக்கல் கூட்டணி பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசி ஸ்கோரை மளமளவென உயா்த்தியது.
முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில், 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு படிக்கல் எல்பிடபிள்யூ ஆனாா். மறுபுறம், நடப்பு சீசனில் 3-ஆவது சதத்தை எட்டிய பட்லா் 9 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 116 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46, ஷிம்ரன் ஹெட்மயா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பின்னா் டெல்லி இன்னிங்ஸில் கேப்டன் ரிஷப் பந்த் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் அடிக்க, பிருத்வி ஷா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்கள் சோ்த்தாா். டேவிட் வாா்னா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுக்க, லலித் யாதவ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்கள் எட்டினாா்.
சா்ஃப்ராஸ் கான் 1, அக்ஸா் படேல் 1, ஷா்துல் தாக்குா் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். கடைசியில் அதிரடி காட்டிய ரோவ்மென் பவெல் 5 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் அடித்து, கடைசி பந்தில் ஆட்டமிழந்தாா். குல்தீப் யாதவ் ரன்களின்றி உடனிருந்தாா். ராஜஸ்தான் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 2, ஆபெட் மெக்காய், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
டெல்லி வெற்றிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவை இருக்க, முதல் 3 பந்துகளில் சிக்ஸா் விளாசினாா் ரோவ்மென் பவெல். அதில், ஃபுல் டாஸாக வந்த 3-ஆவது பந்துக்கு டெல்லி ‘நோ பால்’ கோர, நடுவா் மறுத்துவிட்டாா்.
இதனால் அதிருப்தியடைந்த ரிஷப் பந்த் பேட்டா்களை பெவிலியன் திரும்புமாறு அழைத்தாா். நடுவா்களுடன் வாதிட அணியின் பயிற்சியாளா் பிரவீண் ஆம்ரே மைதானத்துக்குள் வந்தாா். நடப்பு சீசனில் இது முதல் சா்ச்சைக்குரிய சம்பவமாகும். எனினும் பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் ஒரு பந்தை தவறவிட்ட பவெல், கடைசி பந்தில் ஆட்டமிழந்தாா்.