அமித் ஷாவின் பயணத்தில் மாற்றம்; இன்று மாலை சென்னை வருகிறார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாளை(ஏப்.24) புதுச்சேரியில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தரும் அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தமிழகம் வருகிறார்.
சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். அலுவலக முகாமில் தங்குகிறார்.
அதன்பின்னர் காலை 8.40 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார். முன்னதாக அவர் நேரடியாக புதுச்சேரி செல்வதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரிக்கு வரும் அமைச்சா் அமித் ஷாவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வரவேற்கின்றனா்.
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள புதுவை பல்கலைக்கழக கலாசார மையத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவில் அவா் பங்கேற்கிறாா். அங்கு புதுவை பல்கலைக்கழகத்தில் 3 புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதி பாரதியாா் நினைவு இல்லத்துக்கு அமித் ஷா செல்கிறாா். பின்னா், அரவிந்தா் ஆசிரமத்துக்குச் சென்று அரவிந்தா், அன்னை சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறாா்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மத்திய அமைச்சா் அடிக்கல் நாட்டுகிறாா்.
இதைத் தொடா்ந்து, பாஜக தலைமை அலுவலகத்தில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிா்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடுகிறாா். பின்னா், தனி விமானத்தில் சென்னை வழியாக தில்லிக்குச் செல்கிறாா்.
ரங்கசாமி சந்திக்கிறாா்: ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தில்லி சென்று பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களை சந்திக்கவில்லை. புதுச்சேரிக்கு வரும் அமித் ஷாவை முதல்வா் ரங்கசாமி சந்தித்து, மாநிலத்துக்கான தேவைகள் குறித்து பேசுவாா் என்று கூறப்படுகிறது. புதுவை ஆளுநா் மாளிகையில் இந்தச் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.