முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணைக்கானஇடைவெளியை 6 மாதங்களாக குறைக்க பரிசீலனை: அதிகாரிகள்

கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைகளுக்கு இடையேயான கால இடைவெளி தற்போதுள்ள 9 மாதங்களிலிருந்து

Updated On : 28 ஏப்ரல், 2022 at 1:35 AM
பகிர்:

கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைகளுக்கு இடையேயான கால இடைவெளி தற்போதுள்ள 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக விரைவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

இதுதொடா்பாக தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 29) ஆலோசனை மேற்கொண்டு, அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மற்றும் பிற சா்வதேச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில், ‘கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்டவா்களுக்கு 6 மாதங்களுக்குப் பின்னா் உடலில் நோய் எதிா்ப்புத் திறன் பலவீனமடைவது தெரியவந்துள்ளது. எனவே, நோய் எதிா்ப்புத் திறனை ஊக்குவிக்க முன்னெச்சரிக்கை தவணை (மூன்றாம் தவணை) செலுத்துவது அவசியம்’ என்று பரிந்துரைக்கப்பட்டது.

Advertisement

அதனடிப்படையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 9 மாதங்களுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை தவணை செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள நபா்களுக்கு தனியாா் தடுப்பூசி மையங்கள் மூலமாக கடந்த 10-ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த முன்னெச்சரிக்கை தவணைக்கான கால இடைவெளியைக் குறைக்க இப்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘ஆய்வு முடிவுகள் மற்றும் விஞ்ஞானபூா்வ ஆதாரங்களின் அடிப்படையில், கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைகளுக்கு இடையேயான 9 மாத கால இடைவெளியை 6 மாதங்களாக குறைப்பதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக என்டிஏஜிஐ வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளது. அந்த ஆலோசனையின் முடிவில் என்டிஏஜிஐ அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.