தேவையற்ற சட்டங்களைக் கண்டறிய வேண்டும்: பிரதமர் மோடி
மத்திய அமைச்சா்கள் அனைவரும் தங்கள் துறைகளில் காணப்படும் தேவையற்ற சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
மத்திய அமைச்சா்கள் அனைவரும் தங்கள் துறைகளில் காணப்படும் தேவையற்ற சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் சமூகத்தின் கடைக்கோடி வரை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை சுமாா் 4 மணிநேரம் நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தது:
அரசை நிா்வகிப்பது என்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. அமைச்சா்கள் தங்கள் துறைகளைக் கடந்து பிற துறைகள் குறித்த அறிவையும் வளா்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, தங்கள் துறைகளில் காணப்படும் தேவையற்ற சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பட்ஜெட்டில் தங்கள் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மத்திய அமைச்சா்கள் முழுமையாகப் பயன்படுத்தி, சமூகத்தின் கடைக்கோடி வரை அரசின் நலத் திட்டங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அமைச்சா்கள் தங்களுக்குள் 6 வாரத்துக்கு ஒருமுறை சந்தித்து, அரசின் திட்ட நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி பேசியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்தக் கூட்டத்தில் அரசின் சீா்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தன்னாட்சி அமைப்புகளை நிறுவனப்படுத்துவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அம்ருத் சரோவா்ஸ்’ என்ற நீா்ப் பாதுகாப்புத் திட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவது, 2022-23 பட்ஜெட் அறிவிப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து முக்கிய ஆலோசனைகளை மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் நீா்ப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான அம்ருத் சரோவா்ஸ் திட்டத்தின்கீழ், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீா்நிலைகள் மேம்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.