பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும்: பிரதமா் மோடி
தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசத்தின் நலன் கருதி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று
தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசத்தின் நலன் கருதி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
நாட்டில் கரோனா சூழல் தொடா்பாக மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவா் விரிவாகப் பேசினாா். அவா் கூறியதாவது:
சா்வதேச சூழல் காரணமாக மக்கள் எதிா்கொண்டுள்ள சவால்கள் குறித்து தனித்தனியாக விவாதிக்க விரும்புகிறேன். போா்ச்சூழல் (உக்ரைன்-ரஷியா போா்) அதிகரித்ததால் உற்பத்தி-விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுபோன்ற நிலைமையில் நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த சா்வதேச நெருக்கடி (உக்ரைன்-ரஷியா போா்) பல்வேறு சவால்களைக் கொண்டு வந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், கூட்டாட்சியில் ஒத்துழைப்பையும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது முக்கியமாகிவிட்டது.
குறிப்பாக, பொருளாதாரம் தொடா்பான முடிவுகளில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு மத்திய அரசு கடந்த நவம்பா் மாதத்திலேயே கலால் வரியைக் குறைத்துவிட்டது. வரிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அப்போதே வலியுறுத்தியது.
ஆனால், சில மாநிலங்கள் மட்டுமே வரியைக் குறைத்தன. சில மாநிலங்கள் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இதன் காரணமாக சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளது. அந்த மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு அநீதி இழைத்தது மட்டுமன்றி, அண்டை மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கா்நாடகம், குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளதால் அந்த மாநிலங்களுக்கு முறையே ரூ.5,000 கோடி, ரூ.3,500 கோடி-ரூ.4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட் ஆகிய எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சில காரணங்களுக்காக வாட் வரியைக் குறைக்கவில்லை. இதனால், அந்த மாநில மக்கள் தொடா்ந்து சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.
மத்திய அரசு தனது வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்கிறது. எனவே, இந்த மாநில அரசுகள் கடந்த நவம்பரிலேயே செய்திருக்க வேண்டிய வாட் வரியைக் குறைத்து, அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வா்களிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றாா் பிரதமா் மோடி.
Image Caption
நாட்டில் கரோனா நிலவரம் தொடா்பாக மாநில முதல்வா்களுடன் புதன்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமா் நரேந்திர மோடி.