முகப்பு
இந்தியா

ரூ.5,551 கோடி பறிமுதல்: ஷாவ்மி-க்கு செக் வைத்த அமலாக்கத்துறை

சீனாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பெங்களூருவில் உள்ள ஷாவ்மி-க்குச் சொந்தமான ரூ.5,551 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

Updated On : 30 ஏப்ரல், 2022 at 1:24 PM
ரூ.5,551 கோடி பறிமுதல்: ஷாவ்மி-க்கு செக் வைத்த அமலாக்கத்துறை
பகிர்:


பெங்களூரு: சீனாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பெங்களூருவில் உள்ள ஷாவ்மி-க்குச் (Xiaomi) சொந்தமான ரூ.5,551 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இந்த பறிமுதல் நடவடிக்கையானது, அமலாக்கத் துறையினரால் ஒரு மாதத்துக்கும் மேல் நடத்தப்பட்ட விசாரணையின் நிறைவாக நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் மிக முன்னணி செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஷாவ்மி-யின் ஆண்டு விற்றுமுதல் ரூ.34,000 கோடி. 

இந்த ரூ.5,551 கோடியும் ஷாவ்மி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகளிலிருந்து 1999-அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டப்பிரிவின் கீழ்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுவதாவது, இந்த நிறுவனம், ஏற்கனவே, மிகப்பெரிய தொகையை சீனாவில் உள்ள தங்களது குழும நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டது. மீதத்தொகைதான் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான எச்எஸ்பிசி, சிட்டி பேங்க், ஐடிபிஐ மற்றும் டெய்ட்ச் வங்கிக் கணக்குகளில் இருந்தன. 

குழும நிறுவனத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ராயல்டி தொகை செலுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட வணிகத் தொடர்பில்லாத இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை ஷாவ்மி  நிறுவனத்திடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட செல்லிடப்பேசிகளை இந்த நிறுவனம் வாங்கவேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி, ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் செல்லிடப்பேசி தயாரிப்பாளர்கள், சீனாவை தலைமையகமாகக் கொண்டிருக்கும் ஷாவ்மியின் குழும நிறுவனங்களிலிருந்து செல்லிடப்பேசியைத் தயாரிக்கத் தேவையான பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து, ஷாவ்மி அளிக்கும் குறிப்புகளின்படி செல்லிடப்பேசியை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆனால், ஷாவ்மி இந்தியா நிறுவனம் இதுவரை எந்த தொழில்நுட்ப உத்திகளையோ, மென்பொருள் தொடர்புடைய உதவிகளையோ, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அளிக்கவில்லை. மாறாக, ஷாவ்மி இந்தியா நிறுவனம் பணத்தை வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது. ஆனால், பணம்பெறும் அந்த நிறுவனங்கள் எந்த வணிகச் சேவைகளையும் மேற்கொள்ளவில்லை. இது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் நான்காவது பிரிவின் கீழ் விதிமீறலாகும். 

அதுபோல, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும் போது, இந்த நிறுவனம் வங்கிகளுக்கு தவறான தகவல்களை அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.