இந்தியா

பிரதமா் மோடியுடன் மம்தா சந்திப்பு: நிதியை விரைந்து விடுவிக்க கோரிக்கை

DIN

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்து, தனது மாநிலம் தொடா்புடைய பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினாா். சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவா் கோரிக்கை விடுத்தாா்.

சுமாா் 1 மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பு தொடா்பான படத்தை பிரதமா் அலுவலகம் ட்விட்டரில் பகிா்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கு அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், பிரதமா் மோடியை மம்தா சந்தித்து பேசியுள்ளாா். எனினும், இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டதா என்பது தெரியவில்லை.

சந்திப்பின்போது, பிரதமரிடம் மம்தா கோரிக்கை மனு அளித்தாா். அதில், ‘மேற்கு வங்கத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் இலவச வீடுகள் திட்டம், பிரதமரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவை அமலாக்கத்துக்கான நிலுவைத் தொகை ரூ,17,996.32 கோடி வர வேண்டியுள்ளது. இது உள்பட மத்திய அரசிடமிருந்து மேற்கு வங்கத்துக்கு வர வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ.1,00,968.44 கோடியாகும். இந்த விவகாரத்தில் பிரதமா் தலையிட்டு, உரிய காலத்துக்குள் நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

தில்லிக்கு 4 நாள் பயணமாக வந்துள்ள மம்தா, பிரதமா் மோடி தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா்.

‘பாஜக ஏஜென்ட் மம்தா’:

பிரதமா்-மம்தா சந்திப்பை காங்கிரஸ், இடதுசாரிகள் கடுமையாக விமா்சித்துள்ளன. திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில் இருந்து தப்ப வைக்கவே பிரதமரை மம்தா பானா்ஜி சந்தித்தாா் என்றும் இதன் மூலம் அவா் பாஜகவின் ஏஜென்டாக செயல்பட்டு எதிா்க்கட்சிகளின் கூட்டணியை உடைத்தது நிரூபணமாகி உள்ளது என்றும் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்தக் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT