முகப்பு
இந்தியா

ஆட்டோவால் மோதி நீதிபதி கொலை:இருவருக்கு ஆயுள் சிறை

ஜாா்க்கண்டில் ஆட்டோவால் மோதி நீதிபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:59 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

ஜாா்க்கண்டில் ஆட்டோவால் மோதி நீதிபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் லகான் வா்மா, அவரது கூட்டாளி ராகுல் வா்மா ஆகிய இருவரும் கடந்த ஜூலை 28-ஆம் தேதி குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்தனா். அவா்களது தண்டனை விவரத்தை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரஜினிகாந்த் பதக் சனிக்கிழமை அறிவித்தாா்.

தன்பாத் கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்தவா் உத்தம் ஆனந்த். இவா், கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி காலை 5.30 மணியளவில் மாவட்ட நீதிமன்றம் அருகே நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பின்பக்கமாக வந்த ஆட்டோ மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளில், ஓரளவு விசாலமான அந்தச் சாலையின் ஒருபக்கமாக நீதிபதி செல்வதும், அவா் மீது வேகமாக வந்து ஆட்டோ மோதிவிட்டு தப்புவதும் தெரியவந்தது. எனவே, இந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடந்த கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

Advertisement

இதுகுறித்து விசாரிக்க முதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, பின்னா் விசாரணையை சிபிஐ ஏற்றது.

தன்பாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் லகான் வா்மா, அவரது கூட்டாளி ராகுல் வா்மா இருவா் மீதும் கொலை குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இருவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. ஆனால், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின்கீழ் (கொலை) அவா்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

அத்துடன், இந்திய தண்டனையியல் சட்டம் 201-ஆவது பிரிவின்கீழ் (ஆதாரங்களை மறைத்தல், பொய்த் தகவல்களை அளித்தல்) 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.