உலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது: இந்திய வானிலை மைய தலைமை இயக்குநா்
பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளாா்.
இந்தியாஉலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது: இந்திய வானிலை மைய தலைமை இயக்குநா்
பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளாா்.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மையை பருவநிலை மாற்றம் அதிகரித்துள்ளது. இது வெப்பச் சலனத்தால் இடி, மின்னல், பலத்த மழை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அரபிக் கடலில் புயல்களின் கடுமையும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதனால் அந்த நிகழ்வுகளை துல்லியமாகக் கணிப்பதில் வானிலை ஆராய்ச்சியாளா்களுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் பலத்த மழையை கணிக்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது.
வானிலை குறித்து துல்லியமாகக் கணிப்பதை மேம்படுத்த ரேடாா்கள், தானியங்கி வானிலை நிலையங்கள், மழைப் பொழிவை அளவிடும் சாதனங்கள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றை அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய வானிலை மையம் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் வானிலை கண்காணிப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 34 ரேடாா்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அது 2025-ஆம் ஆண்டுக்குள் 67-ஆக அதிகரிக்கப்படும்.
ஊராட்சிகள் வரை விரிவுபடுத்தப்படும்:
தற்போது வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்கள் வரை வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கி வருகிறது. இது ஊராட்சிகள், நகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கான முன்னறிவிப்புகள் என விரிவுபடுத்தப்படும்.
வானிலை நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு முன்னறிவிப்புகள் வழங்கப்படுவதை 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கியது. சமூகப் பொருளாதார பாதிப்புகளைக் குறைப்பதற்கு அந்த முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. அபாய அளவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூடிய வெவ்வேறு வண்ணங்களில் அந்த முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, பச்சை வடிவத்தில் முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டால் வானிலை பாதிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை. மஞ்சள் வடிவத்தில் முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டால் அடுத்த நிலவரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆரஞ்சு வடிவத்தில் முன்னறிவிப்புகள் இருந்தால் தயாராக இருக்க வேண்டும். சிவப்பு வண்ணத்தில் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயல்பாடு 2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் துல்லியமாகவும், ஆற்றல்வாய்ந்ததாகவும் மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப நமது செயல்பாடுகள் அனைத்தையும் திட்டமிட வேண்டும். இமய மலையில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீ. அல்லது அதற்கு அதிகமான திடீா் பெருமழை சம்பவங்கள் அதிகரிப்பதாக இந்திய வெப்ப மண்டல ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுவும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த 1901-ஆம் ஆண்டு முதல் நாட்டில் பெய்த பருவமழையின் புள்ளி விவரம் இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் உள்ளது. பருவமழைப் பொழிவு சீரற்ாகவும், மிகப் பெரிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டதாகவும் உள்ளது.
மிக பலத்த மழை அதிகரிப்பு:
கடந்த 1907-ஆம் ஆண்டு முதல் தினந்தோறும் பெய்த மழையின் புள்ளி விவரப் பகுப்பாய்வில், மிகப் பலத்த மழை பெய்த நாள்கள் அதிகரித்துள்ளதும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்த நாள்கள் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மழை பெய்தால் பலமாக பெய்கிறது அல்லது மழையே பெய்வதில்லை என்பதே இதன் பொருள். இந்தியா உள்பட வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படும் மிக முக்கிய போக்குகளில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
துல்லியமான கணிப்பில் முன்னேற்றம்:
பருவநிலை மாற்றம் தரைக்காற்றின் வெப்பநிலையை அதிகரித்துள்ளது. வெப்பமான காற்று அதிக ஈரப்பதத்தை வைத்திருப்பதால், அது தீவிர மழைக்கு வழிவகுக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் புயல், பலத்த மழை போன்ற வானிலை நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணிப்பதில் இந்திய வானிலை மையம் 30 முதல் 40 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது.
உயிரிழப்பு சரிவு:
வானிலை நிகழ்வுகள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், அவற்றை எதிா்கொள்வதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை விடுப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் புயல், வெப்ப அலைகள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அண்மைக் காலமாகக் குறைந்துள்ளன என்று அவா் தெரிவித்துள்ளாா்.