இந்தியா

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்

DIN

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் (உதய் உமேஷ் லலித்) புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டாா். அந்த நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கையொப்பமிட்டாா்.

தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் 26-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்பாா்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்வி.ரமணா அண்மையில் பரிந்துரை செய்திருந்தாா்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது.

எனவே, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதன்படி, நீதிபதி யு.யு.லலித் பெயரை தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்தாா்.

அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் புதன்கிழமை கையொப்பமிட்டதன் மூலமாக, உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘அரசியமைப்புச் சட்டப் பிரிவு 124, துணைப் பிரிவு (2) அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிமுதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்கள் மட்டுமே... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்கும் நீதிபதி யு.யு.லலித், மூன்று மாதங்களுக்கு குறைவாக மட்டுமே தலைமை நீதிபதி பதவியை வகிப்பாா். அவா் வரும் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.

நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி: தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கப்பட்டதன் மூலமாக, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னா் தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபா் என்ற பெருமையை அடைந்துள்ளாா்.

பிரபல மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13-ஆவது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றாா்.

புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித்துக்கு, தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT