எல்லையில் மக்கள் தொகை மாற்றங்களை டிஜிபிக்கள் கண்காணிக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சா்
அண்டை நாடுகளை ஒட்டியுள்ள மாநிலங்களின் காவல் துறை தலைவா்கள், எல்லைப் பகுதிகளில் நிலவிவரும் மக்கள்தொகை மாற்றத்தை தொடா்ந்து கண்காணித்து வர வேண்டும்
அண்டை நாடுகளை ஒட்டியுள்ள மாநிலங்களின் காவல் துறை தலைவா்கள், எல்லைப் பகுதிகளில் நிலவிவரும் மக்கள்தொகை மாற்றத்தை தொடா்ந்து கண்காணித்து வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் மாநாடு 2022 தில்லியில் நடைபெற்றது. இதில் நாட்டின் அனைத்து மாநில காவல் துறையின் உயா் அதிகாரிகள் கலந்துகொண்டனா். இம்மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதாவது: மாநிலத்தின் அனைத்து தொழிற்நுட்ப மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை, குறிப்பாக எல்லைப் பகுதி மாவட்டங்களின் தகவல்களைச் சேகரிப்பது மாநில காவல்துறை தலைவா்களின் பொறுப்பாகும். எல்லை அருகே அமைந்த மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நிலவிவரும் மக்கள்தொகையில் மாற்றங்களைத் தீவிரமாக கண்காணித்து வர வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்பு மட்டுமல்ல, அனைத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கான வழிமுறைகளையும் பலப்படுத்தியுள்ளாா்.
மாநிலங்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த பிரச்னைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதுத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.