ரூ.11 கோடி நாணயங்கள் மாயம்: வங்கி முன்னாள் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை
வங்கி முன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் மாயமான வழக்கில், வங்கி முன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். தில்லி, ராஜஸ்தானில் மொத்தம் 25 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
கரெளலி மாவட்டம், மெஹந்திபூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் நாணயங்கள் இருப்பு தொடா்பான முதல்கட்ட ஆய்வில் குளறுபடிகள் இருப்பது கடந்த 2021, ஆகஸ்டில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாணயங்களை முழுமையாக எண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஜெய்ப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் பணியமா்த்தப்பட்டது.
வங்கியின் கணக்குப் புத்தகங்களின்படி ரூ.13 கோடி நாணயங்கள் இருக்க வேண்டிய நிலையில், வெறும் ரூ.2 கோடி நாணயங்கள் மட்டுமே இருந்ததை தனியாா் நிறுவனம் கண்டறிந்தது.
இதனிடையே, நாணயங்கள் எண்ணும் பணியில் ஈடுபடக் கூடாது என்று அந்த நிறுவன ஊழியா்களுக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் புகாா் எழுந்தது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி, ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தை எஸ்பிஐ அணுகியது. உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றது.
இந்நிலையில், தில்லி, ஜெய்ப்பூா், கரெளலி, அல்வாா், உதய்ப்பூா், பில்வாரா உள்பட 25 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். வங்கி முன்னாள் அதிகாரிகள் 15 போ் மற்றும் இதர நபா்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்ாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.