முகப்பு
இந்தியா

தில்லி மதுபானக் கடைகள் உரிம முறைகேடு: சிபிஐ விசாரணை தொடக்கம்; களமிறங்கும் அமலாக்கத் துறை

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கவிருக்கிறது.

தில்லி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இவ்வழக்கில், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, அரசு அதிகாரிகள் உள்பட 15 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிசோடியா, அரசு அதிகாரிகள் மற்றும் சில தொழிலதிபா்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனா். சிசோடியா வீட்டில் மட்டும் சுமாா் 15 மணிநேரம் சோதனை நடத்தப்பட்டது.

தில்லி மற்றும் 6 மாநிலங்களில் மொத்தம் 31 இடங்களில் நடைபெற்ற இச்சோதனையில், பல்வேறு நிதி பரிவா்த்தனைகள் தொடா்புடைய ஆவணங்கள், எண்ம பதிவுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரிடம் விசாரணை:

இந்த ஆவணங்களின் அடிப்படையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு அழைப்பாணை அனுப்பி, தில்லி சிபிஐ தலைமையகத்துக்கு சனிக்கிழமை வரவழைத்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டன். மேலும் வாக்குமூலமும் பதிவு செய்தனா். ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவை முழுமையாக ஆராயப்பட்ட பின் இதர நபா்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்படும் என்று கூறிய அதிகாரிகள், மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

இதனிடையே, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) அமலாக்கத் துறையிடம் சிபிஐ சனிக்கிழமை பகிா்ந்தது. இதன் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குற்றச்சாட்டுகள் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கவுள்ளது.

சிசோடியா மீதான குற்றச்சாட்டு:

தில்லி அரசின் 2021-22ஆம் ஆண்டு கலால் வரி கொள்கை தொடா்பான முடிவுகளை உரிய அமைப்பிடம் அனுமதி பெறாமல் மேற்கொண்டதாக சிசோடியா மற்றும் அரசு அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை உரிமதாரா்களுக்கு கட்டண தள்ளுபடி, சலுகை, உரிம நீட்டிப்பு போன்ற ஆதாயங்களை அளிக்கும் நோக்கில் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாா்-யாா்? இந்திய தண்டனையியல் சட்டத்தின் குற்றச் சதி பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் கடந்த புதன்கிழமை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அதன் தொடா்ச்சியாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

இதில் சிசோடியா, கலால் துறை முன்னாள் ஆணையா் அரவா கோபி கிருஷ்ணா, முன்னாள் துணை ஆணையா் ஆனந்த் திவாரி, உதவி கலால் ஆணையா் பங்கஜ்பட்நாகா், 9 தொழிலதிபா்கள், 2 நிறுவனங்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

விசாரணை வளையத்தில் ‘உதவியாளா்கள்’:

கலால் கொள்கை முறைகேட்டால் ஆதாயம் அடைந்த மதுபான விற்பனை உரிமதாரா்களிடமிருந்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சத்தை கைமாற்றும் செயலில் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளா்களாக கருதப்படும் அமித் அரோரா, தினேஷ் அரோரா, அா்ஜுன் பாண்டே ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமித் அரோரா உள்ளிட்டோருக்கு கோடிக்கணக்கில் கிடைக்கப் பெற்ற 2 முக்கிய பரிவா்த்தனைகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.