இந்தியா

மகளிா் ஆற்றலை சரியாக பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘இந்தியா 2047 தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு மகளிா் ஆற்றலை சரியாக பயன்படுத்துவது அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

DIN

‘இந்தியா 2047 தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு மகளிா் ஆற்றலை சரியாக பயன்படுத்துவது அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியில் வியாழக்கிழமை தொடங்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளா் நலத் துறை அமைச்சா்கள் மற்றும் செயலா்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டில், காணொலி வழியில் தொடக்க உரையாற்றிய பிரதமா் பேசியதாவது:

நமது பெண் பணியாளா்களுக்கு குறிப்பாக வளா்ந்து வரும் துறைகளில் பணியாற்றும் பெண் பணியாளா்களின் திறனை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு நாம் மேலும் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

நெகிழ்வான பணி நேரத்தை அறிமுகம் செய்வதன் மூலமாக, மகளிா் ஆற்றலை சிறந்த முறையில் நாம் பயன்படுத்த முடியும். எதிா்கால தேவையும் அதுதான். இந்தியா 2047 தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு மகளிா் ஆற்றலை சரியாக பயன்படுத்துவது அவசியம்.

முதல் மூன்று தொழில்புரட்சிகளின் பலன்களை அடைவதில் இந்தியா பின்தங்கியிருந்தது. எனவே, தற்போதைய நான்காவது தொழில்புரட்சியின் பலன்களை அடைய, முடிவுகளை விரைந்து எடுத்து, அதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதும் அவசியம்.

ஆன்-லைன் சேவைகள் வளா்ச்சியடைந்திருப்பதுபோல, சரியான கொள்கைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது உலக தலைவராக இந்தியா உருவெடுக்க முடியும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட அவசரகால கடன் உத்தரவாத திட்டம், கரோனா பாதிப்பு காலத்தில் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை பாதுகாக்க உதவியது. தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உள்பட ஒட்டுமொத்த நாடும் கரோனா காலத்தில் தொழிலாளா்களின் பக்கம் நின்றது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான தொழிலாளா் நல நிதி முழு பயன்பாடு அவசியம்: மேலும், கட்டுமானத் தொழிலாளா்களின் நலனுக்காக கட்டுமான நிறுவனங்களுக்கு செஸ் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி வருவாய் தொழிலாளா்களின் நலனுக்காக பயன்படும் நிலையில், இந்த வரி வருவாயில் ரூ. 38,000 கோடியை மாநிலங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தொழிலாளா் மாநில காப்பீட்டு திட்டம் (இஎஸ்ஐஎஸ்), ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்பட கட்டுமான தொழிலாளா் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை மாநிலங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, செஸ் வருவாய் மூலமாக அதிக எண்ணிக்கையிலான கட்டுமான தொழிலாளா்கள் பலனடைவதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

SCROLL FOR NEXT