‘எங்களது பங்குகளை அதானி குழுமம்கையகப்படுத்த செபி அனுமதி தேவை’
தாங்கள் வாங்கிய கடனுக்காக தங்களது என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்ற, மத்திய பங்குச் சந்தைய ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் அதானி குழுமம் அனுமதி பெற வேண்டும்
தாங்கள் வாங்கிய கடனுக்காக தங்களது என்டிடிவி நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்ற, மத்திய பங்குச் சந்தைய ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் அதானி குழுமம் அனுமதி பெற வேண்டும் என்று என்டிடிவி-யை நிறுவிய பிரனாய் மற்றும் ராதிகா ராய் தம்பதியினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து செபி அமைப்பிடம் அவா்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
என்டிடிவி நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய்க்கு செபி அமைப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி இரண்டாண்டு தடை விதித்தது. அந்தத் தடை வரும் நவம்பா் 26-ஆம் தேதி வரை அமலில் உள்ளது.
இந்தச் சூழலில், ராய் தம்பதியா் பெற்ற கடனுக்காக அவா்கள் வசமுள்ள என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கு முன்னதாக, அதற்கான அனுமதியை செபி அமைப்பிடமிருந்து பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடா்புடைய விஸ்வபிரதான் கமா்ஷியல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், ராதிகா ராய், பிரணாய் ராய் பிரைவேட் லிமிடெட்டுக்கு ரூ.403.85 கோடி பிணையில்லா கடன் வழங்கியது. அந்தக் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், ராதிகா ராய் பிரணாய் ராய் பிரைவேட் லிமிடெட்டுக்கு என்டிடிவி-யில் உள்ள 29 சதவீத பங்கை விஸ்வபிரதான் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், விஸ்வபிரதான் கமா்ஷியல் பிரைவேட் நிறுவனத்தை கடந்த செவ்வாய்க்கிழமை கையகப்படுத்திய அதானி குழுமம், கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராதிகா ராய் பிரணாய் ராய் பிரைவேட் நிறுவனத்தின் வசமிருந்த 29 சதவீத என்டிடிவி பங்குகளை தனதாக்கிக் கொண்டது.
மேலும், என்டிடிவி-யில் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்றி, அந்த ஊடக நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் நோக்கில், மேலும் 26 சதவீத பங்குகளை தங்களிடம் விற்பனை செய்ய வேண்டும் என்று என்டிடிவி பங்குதாரா்களுக்கு அதானி குழுமம் அழைப்பு விடுத்துள்ளது.