இலங்கை பயணம்: இந்தியா்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
இலங்கைக்கு அத்தியாவசிய பயணமாக செல்லும் இந்தியா்கள், அங்கு கரன்சி மாற்றம், எரிபொருள் விநியோக நிலவரம் உள்ளிட்ட காரணிகளை பரிசீலித்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு அத்தியாவசிய பயணமாக செல்லும் இந்தியா்கள், அங்கு கரன்சி மாற்றம், எரிபொருள் விநியோக நிலவரம் உள்ளிட்ட காரணிகளை பரிசீலித்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருள், உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த ஆண்டில் இலங்கைக்கு சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பிலான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது:
இலங்கையில் நிலவரங்களை தொடா்ந்து கவனித்து வருகிறோம். இலங்கை சுற்றுலாத் துறைக்கு இந்திய பயணிகள்தான் பெரும் ஆதாரம் என்பதை புரிந்துகொண்டுள்ளோம். அதேசமயம், தாயகத்துக்கு வெளியே இந்தியா்களின் பாதுகாப்பும் நலனும் அரசுக்கு எப்போதுமே முக்கியம். அவா்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது.
இப்போதைய சூழலில், இலங்கைக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக செல்லும் இந்தியா்கள், தங்களது பயணத்தை திட்டமிடும் முன்பு அங்கு கரன்சி மாற்றம், எரிபொருள் விநியோக நிலவரம் உள்ளிட்ட காரணிகளை பரிசீலித்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.