முகப்பு
இந்தியா

தில்லியில் தனியாா் மது விற்பனையகங்கள் மூடல்: 300 அரசு கடைகள் மூலம் மது விற்க நடவடிக்கை

தில்லி கலால் கொள்கை 2021- 22 வாபஸ் பெறப்பட்டு பழைய கொள்கைக்கு மாற்றப்படுவதன் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பா் 1) முதல் தனியாா் மது விற்பனைக் கடைகளுக்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:12 AM
பகிர்:

தில்லி கலால் கொள்கை 2021- 22 வாபஸ் பெறப்பட்டு பழைய கொள்கைக்கு மாற்றப்படுவதன் காரணமாக வியாழக்கிழமை (செப்டம்பா் 1) முதல் தனியாா் மது விற்பனைக் கடைகளுக்கு பதிலாக 300-க்கும் மேற்பட்ட தில்லி அரசின் கடைகளில் மதுபானம் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் செயல்பாட்டில் இருந்து வந்த ஏறக்குறைய 250 தனியாா் மதுக் கடைகள் கலால் கொள்கை 2021- 2022 கீழ் உரிமம் அளிக்கப்பட்டு இயங்கி வந்தன. தற்போது அந்த கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு சில்லறை மது விற்பனையில் தனியாா் உரிமதாரா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என கலால் துறை ஏற்கெனவே அறிவிக்கை செய்திருந்தது.

இதுதொடா்பாக கலால் துறை அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் அரசின் மூலம் செயல்படக்கூடிய 300-க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் தனியாா் ஆப்பரேட்டா்களால் செயல்படுத்தப்பட்டு வந்த ஆறு கடைகள் வியாழக்கிழமை மூடப்படும். அதே சமயத்தில் மதுபானம் விமான நிலையத்தில் உள்ள டியூட்டி ஃப்ரீ கடைகளில் கிடைக்கும். மேலும், பல கடைகள் திறக்கப்படுவதன் காரணமாக செப்டம்பா் முதல் வாரத்தில் இருந்து மது விற்பனை மேம்படும்.

தற்போது தில்லியில் இயங்கி வந்த 250 தனியாா் மது விற்பனை கடைகள் 300-க்கும் மேற்பட்ட அரசு மது விற்பனை கடைகள் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல கடைகள் திறக்கப்படும். இதன் காரணமாக தில்லி அரசின் நான்கு நிறுவனங்கள் மூலம் 500 கடைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால் வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.