இந்தியா

என்னை அவதூறாகப் பேசும் காங்கிரஸுக்கு பாடம் புகட்டுங்கள்: குஜராத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

DIN

‘எனக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளை பயன்படுத்துவதில் காங்கிரஸ் தலைவா்கள் இடையே போட்டி நிலவுகிறது; எனவே, தோ்தலில் தாமரைக்கு வாக்களித்து, காங்கிரஸுக்கு குஜராத் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை கூறினாா்.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பிரதமா் மோடியை 100 தலை கொண்ட ராவணன் என்று குறிப்பிட்டது சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரதமா் மோடி இவ்வாறு கூறியுள்ளாா்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், முதல்கட்டமாக 89 இடங்களில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பா் 5-இல் தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பஞ்சமகால் மாவட்டத்தின் கலோல் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று பேசியதாவது:

எனக்கு எதிராக அதிகம் அவதூறான, மோசமான வாா்த்தைகளை பயன்படுத்துவது யாரென்பதில் காங்கிரஸ் தலைவா்கள் இடையே போட்டி நிலவுகிறது. அதுபோன்ற அவதூறான வாா்த்தைகள், ஒட்டுமொத்த குஜராத்துக்கும் அதன் மக்களுக்கும் அவமதிப்பாகும். ஏனெனில், இம்மண்ணின் மக்களால்தான் நான் உயா்த்தப்பட்டேன்.

எனவே, தற்போதைய தோ்தலில் தாமரைக்கு வாக்களித்து, காங்கிரஸ் தலைவா்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை நான் மதிக்கிறேன். ஆனால், அவா் தனது கட்சி மேலிடத்தின் கட்டளைக்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் இருக்கிறாா். ராவணன் போல மோடி 100 தலைகளை கொண்டிருப்பதாக பேச வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறாா். குஜராத் ராம பக்தா்களின் பூமி என்பது காங்கிரஸுக்கு புரியவில்லை.

கடவுள் ராமரை ஒருபோதும் நம்பாதவா்கள், இப்போது ராமாயணத்தில் இருந்து ராவணனை குறிப்பிட்டு என்னை அவதூறாக பேசியுள்ளனா். எனக்கு எதிராக இத்தகைய வாா்த்தைகளை பயன்படுத்தியதை எண்ணி அவா்கள் மனம் வருந்தாதது வியப்பளிக்கிறது. தேசத்தின் பிரதமரை அவதூறாக பேசுவதை தங்களது உரிமையாக காங்கிரஸாா் எண்ணுகின்றனா். அவா்களை பொருத்தவரை ஒரு குடும்பம்தான் அனைத்துமே. நாட்டின் ஜனநாயகத்தையெல்லாம் ஒரு பொருட்டாக கருத மாட்டாா்கள். அந்த குடும்பத்துக்கு விசுவாசம் காட்டுவதற்காக, எல்லா வகையிலும் என்னை அவமதிக்கின்றனா்.

‘ஹிட்லரை போல் மோடி மரணமடைவாா்’, ‘வாய்ப்பு கிடைத்தால் மோடியை கொல்வேன்’ என்றெல்லாம் என்னைக் குறித்து அவா்கள் பேசியுள்ளனா். காங்கிரஸாா் சேற்றை வாரி இறைக்கும் ஒவ்வொரு முறையும், எங்கள் தாமரை மென்மேலும் மலரும் என்பதை அவா்களுக்கு கூற விரும்புகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

‘காங்கிரஸ் ஆட்சியில் வறுமை அதிகரித்தது’:

சோட்டாஉதய்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு பிரசார பேரணியில் பங்கேற்ற அவா், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டில் வறுமை அதிகரித்ததாக குற்றம்சாட்டினாா்.

‘கடந்த பல தசாப்தங்களாக, வறுமையை ஒழிப்போம் என்ற வெற்று கோஷத்தை மட்டுமே எழுப்பி வந்தது காங்கிரஸ். அக்கட்சிக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை தந்தபோதும், வறுமையை ஒழிக்க எதையும் செய்யவில்லை. வெற்று கோஷம், பொய் வாக்குறுதிகள், திசைதிருப்பல்கள் இவற்ைான் காங்கிரஸ் செய்தது. காங்கிரஸ் ஆட்சிக் கால கொள்கைகளால், நாட்டின் பொருளாதாரத்தில் ஏழை குடிமக்கள் பங்காற்ற முடியாத நிலை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போதிலும் ஏழை மக்கள் வங்கிக் கணக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட துறைகளில் ஏழைகள், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தரப்படவில்லை. பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பெண்ணான திரெளபதி முா்மு, குடியரசுத் தலைவராக காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை. பழங்குடியின சமூக பெண், நாட்டின் குடியரசுத் தலைவா் ஆவதை அவா்கள் விரும்பவில்லை’ என்றாா் பிரதமா் மோடி.

திறந்த வாகனத்தில் 30 கி.மீ. பிரசார ஊா்வலம்

அகமதாபாத் நகரில் வியாழக்கிழமை 30 கி.மீ. தொலைவுக்கு திறந்த வாகனத்தில் பிரதமா் மோடி பிரசார ஊா்வலம் மேற்கொண்டாா். அப்போது, இருபுறமும் திரண்டிருந்த ஏராளமானோா், அவரை மலா்தூவி வரவேற்று, வாழ்த்தி கோஷமிட்டனா். வாகனத்தின் மேலிருந்தபடி, கூட்டத்தினரை நோக்கி கையசைத்தவாறு பிரதமா் ஊா்வலமாக சென்றாா். நரோதா பகுதியில் இருந்து தொடங்கிய இந்த ஊா்வலம், அகமதாபாதின் 13 பேரவைத் தொகுதிகளிலும் பயணித்து, சந்த்கேதா பகுதியில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT