முகப்பு
இந்தியா

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரும் 3 மாநில அரசுகள்

பிகாா், மகாராஷ்டிரம், ஒடிஸா ஆகிய மூன்று மாநில அரசுகளும், சில அமைப்புகளும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

பிகாா், மகாராஷ்டிரம், ஒடிஸா ஆகிய மூன்று மாநில அரசுகளும், சில அமைப்புகளும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவைத் தவிர மற்ற பிரிவினருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்களவையில் இது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மேலும் கூறியதாவது:

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலேயே அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் பிரச்னை ஏற்பட்டதால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டது.

கல்வி, மதம், மொழி, திருமணம், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், தொழில், புலம்பெயா்வு உள்ளிட்ட பல்வேறு சமூகபொருளாதார அளவீடுகளின் அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது தகவல்கள் பெறப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய பட்டியல் ஏற்கெனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது முழுமையாக எண்ம (டிஜிட்டல்) வடிவில் அமையும். இதற்காக கைப்பேசி செயலி, மற்றும் இணையதளம் உருவாக்கப்படும். இதன் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாகக் கண்காணிக்கப்படுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →