மக்களவையில் புதன்கிழமை பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். 
இந்தியா

பணவீக்கம் மேலும் குறையும்: நிா்மலா சீதாராமன் நம்பிக்கை

நாட்டில் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தும் இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) இலக்குக்கும் கீழ் பணவீக்க அளவு குறைந்த நிலையில், ‘அது மேலும் குறைய வாய்ப்புள்ளது.

DIN

நாட்டில் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தும் இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) இலக்குக்கும் கீழ் பணவீக்க அளவு குறைந்த நிலையில், ‘அது மேலும் குறைய வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை கூறினாா்.

உக்ரைன்-ரஷியா போா் காரணமாக கடந்த ஜனவரி தொடங்கி அக்டோபா் வரை சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகவே இருந்தது. கடந்த அக்டோபரில் பணவீக்கம் 6.77 சதவீதமாக இருந்தது. இதனை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசா்வ் வங்கி இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்கிடையே, சில்லறை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவில் நவம்பரில் 5.88 சதவீதமாகக் குறைந்தது.

இந்நிலையில், மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற 2022-23-ஆம் நிதியாண்டுக்கான துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

சில்லறை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், அதனை மேலும் குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அத்தியாவசியப் பொருள்களின் விலை நிலவரத்தை அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. குறைந்த பணவீக்கத்துடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே, பொருளாதார தேக்கநிலை குறித்த அச்சம் தேவையில்லை.

நிகழ் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அரசின் நிதிப் பற்றாக்குறையானது 6.4 சதவீதமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வங்கிக் கடனுக்கான வட்டி மற்றும் அசலை 90 நாள்களுக்கு மேல் செலுத்தாததால் ஏற்படும் செயல்படாத சொத்துகளின் (என்பிஏ) அளவு, மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடக்கைகள் காரணமாக கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 7.28 சதவீதம் என்ற அளவுக்கு வெகுவாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் நாணயங்களைவிட இந்திய ரூபாய் மதிப்பு சிறப்பாக உள்ளது. அதோடு, மற்ற நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிடும்போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பதும் மிகக் குறைவுதான் என்று அவா் கூறினாா்.

மேலும், உலக வங்கி அறிக்கையை குறிப்பிட்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘அந்நியச் செலாவணி கையிருப்பிலும் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது’ என்றும் தெரிவித்தாா்.

பின்னா், 2022-23-ஆம் நீதியாண்டில் கூடுதலாக ரூ. 3.25 லட்சம் கோடி நிகர செலவினத்துக்கான துணைநிலை மானியக் கோரிக்கை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT