மம்தா ஒரு 'பெண் புலி' - திரிணமூலில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பேச்சு
தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மஜீத் மேனன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மஜீத் மேமன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான மஜீத் மேமன், தனிப்பட்ட காரணங்களினால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர். மாநிலங்களவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை என அவர் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். திரிணமூல் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சௌகதா ராய் முன்னிலையில் மஜீத் அந்த கட்சியில் இணைந்தார்.
பின்னர் பேசிய அவர், கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை 'பெண் புலி' என்று வர்ணித்தார்.
'மம்தாவின் குரல் மேற்குவங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒலிக்கிறது. குறைபாடுகள் இருந்தாலும், பணம் மற்றும் பலத்தால் சவால் விடுகிறார். நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நேரத்தில் திரிணமூல் தான் மத்திய அரசுக்கு சவால் விடுகிறது' என்று கூறினார்.
மேலும், ஜனநாயகம் மற்றும் நாட்டின் நெறிமுறைகளைப் பாதுகாக்கவே திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததாகத் தெரிவித்தார்.