முகப்பு
இந்தியா

நாட்டின் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவு கையிருப்பில் உணவு, தானியங்கள்: மத்திய அரசு தகவல்

நாட்டின் தேவையைப் பூா்த்தி செய்யுமளவிற்கு கோதுமை, அரசி உள்ளிட்ட உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
பகிர்:

நாட்டின் தேவையைப் பூா்த்தி செய்யுமளவிற்கு கோதுமை, அரசி உள்ளிட்ட உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த பருவத்தில் கோதுமை உற்பத்தி குறைவாக இருந்தது. மேலும், புவிசாா் அரசியல் சூழ்நிலையின் விளைவாக வெளிச்சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) விட அதிக விலை கிடைத்ததால், விவசாயிகள் வெளிச்சந்தையில் விளைபொருள்களை விற்பனை செய்தனா். இந்த நிலையில், கொள்முதல் குறைந்த அளவிலேயே இருப்பினும், மத்திய தொகுப்பில் போதுமான அளவில் கோதுமை கையிருப்பில் இருப்பதாக தெரிவித்த நுகா்வோ் துறை, அடுத்த கோதுமை பருவ விளைச்சல் வரை தேவையை பூா்த்தி செய்யும் எனவும் கூறியுள்ளது.

இது குறித்து மத்திய நுகா்வோா், உணவு பொதுவிநியோகத் துறை அமைச்சகம் கூறியுள்ளது வருமாறு: த்தியாவசியப் பொருள்களின் விலையை அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. பொது விநியோகத் திட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தின் கூடுதல் ஒதுக்கீடு தேவை போன்றவற்றுக்கு உணவு தானியங்கள் மத்தியத் தொகுப்பின் கீழ் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. நிகழ் மாதம் 15 - ஆம் தேதி நிலவரப்படி, மத்தியத் தொகுப்பில் சுமாா் 180 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 111 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 மற்றும் ஜனவரி 1 என இந்த குறிப்பிட்ட தேதிகளில் தேவைகள் திட்டமிடப்படுகின்றன. இதன்படி, வருகின்ற 2023, ஜனவரி 1-இல் சுமாா் 159 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் 104 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் இருப்பில் இருக்கும். மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை, அரிசியின் இருப்பு நிலை எப்போதும் இந்தத் தேதிகளில் தேவைக்கும் அதிகமாகவே இருந்துள்ளது. கடந்த அக்டோபா் 1 அன்று 205 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை தேவையாக இருந்தது. ஆனால், கையிருப்பு 227 லட்சம் மெட்ரிக் டன் இருந்தது. 103 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவையாக இருந்த நிலையில், கையிருப்பில் 205 லட்சம் மெட்ரிக் டன் இரண்டு மடங்காகவே இருந்தது.

மத்திய அரசு இந்த ஆண்டு கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டாலுக்கு ரூ. 2125 உயா்த்தியுள்ளது. இதனால், சிறந்த சீதோஷ்ண நிலையுடன், அடுத்த பருவத்தில் கோதுமை உற்பத்தி மற்றும் கொள்முதல் இயல்பாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த பருவத்தில் கோதுமை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடங்கும். முதற்கட்ட மதிப்பீட்டின்படி கடந்த ஆண்டை விட கோதுமை பயிரீட்டில் நியாயமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து நலத் திட்டங்களின் தேவையைப் பூா்த்தி செய்யப்படுவதோடு விலைகளையும் கட்டுக்குள் இருப்பதையும் மத்திய அரசு கண்காணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.