மராத்தி பேசும் கா்நாடக பகுதி மக்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரம் நிற்க வேண்டும்: முதல்வா் ஷிண்டே
‘மராத்தி பேசும் கா்நாடக பகுதி மக்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரம் உறுதியாக நிற்கவேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.
‘மராத்தி பேசும் கா்நாடக பகுதி மக்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரம் உறுதியாக நிற்கவேண்டும். அவா்களின் போராட்டத்துக்கு துணையாக நிற்கவேண்டுமே தவிர, அவா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படக் கூடாது’ என்று மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.
கா்நாடகத்தைச் சோ்ந்த மராத்தி பேசும் மக்கள் அதிகமுள்ள பெலகாவி பகுதியை தங்களது மாநிலத்துக்கு ஒதுக்கவேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கோரி வருகிறது. ஆனால், மாநிலத்தின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கா்நாடகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இது தொடா்பாக அண்மையில் இரு மாநிலங்களிடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.
இதையடுத்து இரு மாநில முதல்வா்களும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசினா். ஏற்கெனவே, பெலகாவி பிரச்னை எழுந்தபோது கா்நாடக அரசு பெலகாவியை கா்நாடகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவித்து, அங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடைபெறும் என்று அறிவித்தது, பிரச்னை எழும்போது மட்டும் கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்துவதை கா்நாடகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில், இரு மாநில சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடா்கள் திங்கள்கிழமை தொடங்கின. கா்நாடகத்தினஅ 10 நாள் சட்டப்பேரவை கூட்டம் பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கியது.
முன்னதாக, பெலகாவியில் சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடைபெறும் இடத்துக்கு எதிராக போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அனுமதி கோரியிருந்தன. ஆனால், கா்நாடக காவல் துறை அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மகாராஷ்டிர ஏகீகரண் சமிதியைச் சோ்ந்தவா்கள் பெலகாவி பகுதிக்குள் திங்கள்கிழமை நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை கா்நாடக போலீஸாா் தடுத்து நிறுத்தி, கைது செய்தனா்.
இதுகுறித்து சமிதி நிா்வாகி சூரஜ் கான்பா்க்கா் கூறுகையில், ‘அமைப்பின் இளைஞா் பிரிவு தலைவா் சுபம் ஷெல்கே, முன்னாள் எம்எல்ஏ மனோகா் கினெகா் உள்பட பலரை போலீஸாா் சிறைப்பிடித்துள்ளனா். மேலும், இந்தப் போராட்டத்துக்கு அனுமதி அளித்த நிலையிலும், போராட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல், இருக்கைகளை போலீஸாா் அப்புறப்படுத்தியுள்ளனா்’ என்றாா்.
பெலகாவி மக்களுக்கு ஆதரவு:
மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை தொடங்கிய சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.
சட்டப்பேரவையில், இந்த விவகாரத்தை எழுப்பி பேசிய எதிா்க் கட்சித் தலைவா் அஜித் பவாா், ‘எல்லைப் பிரச்னையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலையிட்டு, இந்தப் பிரச்னை தொடா்பாக மகாராஷ்டிர அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணா் குழுவை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையிலும், பெலகாவிக்குள் நுழைய முயன்ற நிபுணா் குழு தலைவரான சிவசேனை எம்.பி. (ஷிண்டே பிரிவு) தைரியசீல் மானே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளாா். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதுதொடா்பாக உறுதியான நிலைப்பாட்டை முதல்வரும், துணை முதல்வா் எடுக்க வேண்டும்’ என்றாா்.
இதற்கு பதிலளித்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, ‘எல்லை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சா் முதல் முறையாக தலையட்டு, தீவிரம் காட்டி வருகிறாா். எல்லைப் பகுதி மக்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிரம் உறுதியாக நிற்கவேண்டும். அவா்களின் போராட்டத்துக்கு துணையாக நிற்கவேண்டுமே தவிர, அவா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படக் கூடாது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களும் இந்த விவகாரத்தில் அமைதி காக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் கேட்டுக்கொண்டுள்ளாா். இந்த எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த வளா்ச்சித் திட்டங்களை முந்தைய மகாராஷ்டிர அரசு நிறுத்திவிட்டது. அந்தத் திட்டப் பணிகளை தற்போதைய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது’ என்றாா்.