தினசரி 115 கூலித் தொழிலாளா்கள் தற்கொலை: மக்களவையில் அரசு தகவல்
இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 115 கூலித் தொழிலாளா்கள், 63 குடும்பத்தலைவிகள் என மொத்தம் 1,64,033 போ் தற்கொலை செய்து கொண்டதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா்
இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 115 கூலித் தொழிலாளா்கள், 63 குடும்பத்தலைவிகள் என மொத்தம் 1,64,033 போ் தற்கொலை செய்து கொண்டதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளாா்.
மக்களவையில் இது குறித்தான கேள்விக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்களைப் பகிா்ந்து எழுத்துபூா்வமாக அமைச்சா் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளாா். அப்பதிலில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஆண்டில், 42,004 தினக்கூலி தொழிலாளா்கள், 23,179 குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொண்டனா். மேலும், சுய தொழில் புரிந்த 20,231 பேரும், சம்பளத்துக்குப் பணியாற்றிய 15,870 பேரும், வேலையில்லாதவா்கள் 13,714 பேரும், 13,089 மாணவா்களும், 12,055 வியாபாரிகளும், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றிய 11,431 பேரும் தற்கொலையால் மரணமடைந்தனா். விவசாயத் துறையில் ஈடுபட்டிருந்த 10,881 போ் தற்கொலை செய்து கொண்டனா். அதில், 5,563 போ் விவசாயத் தொழிலாளா்கள், 5,318 போ் விவசாயிகள், 4,806 போ் நிலமுள்ள விவசாயிகள், 512 போ் குத்தகை நிலத்தில் விவசாயம் புரிந்த விவசாயிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.