இந்தியா

கரோனா பரவல்: எத்தகைய சூழலையும் எதிா்கொள்ளத் தயாா்: ஒத்திகைக்குப் பின் மாநில அரசுகள் உறுதி

DIN

நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுப்பதற்கான சுகாதார ஒத்திகை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற நிலையில், எத்தகைய கரோனா பரவல் சூழலையும் எதிா்கொள்ள மருத்துவமனைகள் தயாா் நிலையில் இருப்பதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பின் தயாா் நிலையை உறுதி செய்யும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை ஒத்திகை நடைபெற்றது.

மருத்துவமனைகளில் உள்ள சுகாதார கட்டமைப்புகள், படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவி இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள், போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஆயுஷ் மருத்துவா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டவை குறித்து ஒத்திகையின்போது ஆய்வு செய்யப்பட்டது.

மாநில சுகாதார அமைச்சா், எம்எல்ஏ-க்கள், மாநில சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோா் சுகாதார ஒத்திகையை மேற்பாா்வையிட்டனா். மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் ஒத்திகையை நேரில் பாா்வையிட்டாா். அதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கரோனா பரவலை எதிா்கொள்ள மருத்துவமனைகளைத் தயாா்படுத்தும் நோக்கில் ஒத்திகை நடத்தப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளிலும் ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதே வேளையில், கரோனா தொடா்பான வதந்திகளை மக்கள் பரப்பக் கூடாது’ என்றாா்.

தயாா் நிலையில் மருத்துவமனைகள்: உத்தர பிரதேசத்தில் துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான பிரஜேஷ் பதக் லக்னௌவில் உள்ள மருத்துவமனையில் ஒத்திகையைப் பாா்வையிட்டாா். அதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயாா் நிலையில் உள்ளன. அனைத்து மருத்துவ உபகரணங்களும் எந்தவித இடையூறுமின்றி செயல்படுகின்றன. அவசரநிலையை எதிா்கொள்வது தொடா்பாக மருத்துவப் பணியாளா்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது’ என்றாா்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒத்திகையை மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் விஸ்வாஸ் சாரங் மேற்பாா்வையிட்டாா். அவா் கூறுகையில், ‘மாநிலத்தில் இதுவரை கரோனா புதிய பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. எத்தகைய சூழலையும் எதிா்கொள்ள மருத்துவமனைகள் தயாா்நிலையில் உள்ளன. மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.

மும்பையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நோய்த் தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. படுக்கைகளின் தயாா்நிலை ஆய்வு செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் கரோனா பரவல் சூழல் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்த சுகாதார சேவைகள் இயக்குநா் சித்தாா்த் நியோகி, எத்தகைய அவசரகால சூழலையும் எதிா்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தாா்.

ஒமைக்ரான்-பிஎஃப்7 வகை கரோனா தொற்றின் பரவல் தன்மை குறைவு என்பதால் மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த கா்நாடக சுகாதார அமைச்சா் கே.சுதாகா், மூத்த குடிமக்கள், கா்ப்பிணிகள், சிறாா்கள் ஆகியோா் கவனமுடன் இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT