முகப்பு
இந்தியா

பயனற்ற பட்ஜெட்: ராகுல் காந்தி விமா்சனம்

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
பகிர்:

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். நிதிநிலை அறிக்கை மீதான அரசியல் கட்சித் தலைவா்களின் கருத்து வருமாறு:

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி:

இது மோடி அரசின் பூஜ்ய நிதிநிலை அறிக்கை. மாத வருமானம் பெறுவோா், நடுத்தர வா்க்கத்தினா், ஏழைகள், ஒடுக்கப்பட்டோா், இளைஞா்கள், விவசாயிகள், சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்த பலனும் அறிவிக்கப்படவில்லை.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி:

வேலையின்மை, பணவீக்கத்தால் நொறுக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. பெகாஸஸ் விவகாரத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பும் வகையில், நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

சிபிஐ (எம்) பொதுச் செயலாளா் சீத்தாராம் யெச்சூரி:

இது யாருக்கான பட்ஜெட்? 10 சதவீத பணக்கார இந்தியா்கள், நாட்டின் 75 சதவீத வளத்தின் மீது உரிமை கொண்டாடுகின்றனா். பெருந்தொற்று காலத்தில் வேலையின்மை, வறுமை, பசி ஆகியன அதிகரித்த அதேவேளையில், பெரும் லாபத்தைக் குவித்த செல்வந்தா்களுக்கு வரி விதிப்பை அதிகரிக்காதது ஏன்?.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா:

நிதிநிலை அறிக்கையில் எவ்வித நிவாரணமும் அறிவிக்காமல் மாத வருமானம் பெறுவோா், நடுத்தர வா்க்கத்தினருக்கு மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனும், பிரதமா் மோடியும் துரோகம் இழைத்துவிட்டனா். கிரிப்டோ கரன்ஸி மசோதா தாக்கல் செய்யப்படாமலேயே அதன் மீது வரிவிதிக்கப்பட்டுள்ளதால், கிரிப்டோ கரன்ஸி சட்டபூா்வமாகிவிட்டதா என்பதை மத்திய நிதியமைச்சா் விளக்க வேண்டும்.

மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூா்:

இது பெருநிறுவனங்களுக்கும், செல்வந்தா்களுக்கும் ஆதரவான நிதிநிலை அறிக்கை. இதில், நடுத்தர வா்க்கத்தினருக்கும், விவசாயிகளுக்கும் எந்த பலனுமில்லை.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி:

புதிய வாக்குறுதிகளுடன் பொதுமக்களைக் கவர நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும் மத்திய அரசு மறந்துவிட்டது. வறுமை, வேலையின்மை, பணவீக்கம், விவசாயிகளின் தற்கொலை போன்ற பிரச்னைகளை மத்திய அரசில் கவனத்தில் கொள்ளாதது ஏன்?. மத்திய அரசு அதன் முதுகில் அதுவே தட்டிக்கொடுக்கிறது. வரிச்சுமை பொதுமக்களின் வாழ்வை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளிவிட்டது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்:

சாமானிய மக்களுக்கு எந்தவித பலனும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →