ரயில்வே துறைக்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,40,367.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் ரூ.20,311 கோடி அதிகமாகும்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,40,367.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் ரூ.20,311 கோடி அதிகமாகும்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
2022-23-ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.1,40,367.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கு இருப்புப் பாதை அமைக்க ரூ.15,710.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை புதுப்பிக்க ரூ.13,335.47 கோடியும் இரட்டை ரயில் பாதைகள் அமைக்க ரூ.12,108 கோடியும், புதிய வழித்தடங்கள் அமைக்க ரூ.25,243 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ரயில்வே துறைக்கான அறிவிப்புகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றுள்ளாா்.
சட்ட அமைச்சகத்துக்கு ரூ.1,525 கோடி:
2022-23-ஆம் நிதியாண்டில், தோ்தல் ஆணையம் புதிதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சகத்துக்கு ரூ.1,525 கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. காலாவதியான வாக்குப்பதிவு இயந்திரங்களை நிபுணா்கள் குழு முன்னிலையில் அழிப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மக்களவைத் தோ்தலை நடத்த ரூ.180 கோடி, வாக்காளா் அட்டைகள் வழங்க ரூ.18 கோடி என தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்கு மொத்தம் ரூ.292 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.288 கோடி:
அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பயிற்சி அளிப்பதற்காக, வரும் நிதியாண்டில் மத்திய பணியாளா் பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு ரூ.288.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியில், ரூ.210.75 கோடி செலவில் முசௌரியில் உள்ள லால் பகதூா் தேசிய அகாதெமி மேம்படுத்தப்படும். இதுதவிர தில்லியில் உள்ள பயிற்சி மையமும், மிஷன் கா்மயோகி சிவில் சா்வீஸ் கட்டடமும் மேம்படுத்தப்படும். இதுதவிர, நிா்வாக சீா்திருத்தங்களுக்காக ரூ.44.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிபிஐக்கு ரூ.911 கோடி:
மத்திய பட்ஜெட்டில் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) ரூ.911.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 4.75 சதவீதம் அதிகமான தொகையாகும். 2021-22-ஆம் நிதியாண்டில் சிபிஐக்கு ரூ.835.39 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
செய்தி, ஒலிபரப்புத் துறைக்கு ரூ.3,980 கோடி:
மத்திய பட்ஜெட்டில், செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு ரூ.3,980.77 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் இந்த முறை செய்தி, ஒலிபரப்புத் துறைக்கு 90 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரசாா் பாரதிக்கு ரூ.2,555.29 கோடியும், பிரஸ் கவுன்சில் இந்தியாவுக்கு ரூ.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ரூ.3,030 கோடி:
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.3,030 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதில், மாசு கட்டுப்பாட்டுக்கு ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.10 கோடி குறைவாகும்.
பசுமை இந்தியா தேசியத் திட்டத்துக்கு 361.69 கோடியும், தேசிய காடுகள் வளா்ப்புத் திட்டத்துக்கு ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் நலத் துறைக்கு ரூ.25,172 கோடி:
மத்திய பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.25,172.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இது 3 சதவீதம் அதிகமாகும். 2021-22-இல், இந்த அமைச்சகத்துக்கு ரூ.24,435 கோடி ஒதுக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு ரூ.1,500 கோடி:
வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கான திட்டத்தின்கீழ் நிதிக் கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் முதல் கட்டமாக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினா் நலத் துறைக்கு ரூ.5,020 கோடி:
மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு ரூ.5,020 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.674.05 கோடி அதிகமாகும்.
2021-22-ஆம் நிதியாண்டில் சிறுபான்மையினா் நலத் துறைக்கு ரூ.4,810.77 கோடி ஒதுக்கப்பட்டு, பின்னா் ரூ.4,346.45 கோடியாகக் குறைக்கப்பட்டது.
2022-23-ஆம் நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில், 10-ஆம் வகுப்பு வரையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.1,425 கோடியும், 10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.515 கோடியும் செலவிடப்படும். சிறுபான்மையினரின் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்கு ரூ.491 கோடி செலவிடப்படும்.
புதிதாக 400 "வந்தே பாரத்' ரயில்கள்
புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்களை ரயில்வே அறிமுகப்படுத்தும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மக்களது பயணத்தின் தரத்தை உயர்த்தும் வகையிலும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய தொழில்நுட்பத்திலான 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த ரயில்கள் தயாரிக்கப்படும். குறைந்த எடையில் அலுமினியம் மூலம் ஒவ்வொன்றும் 50 டன் அளவு குறைந்த எடையுடன் வடிவமைக்கப்படும். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படும். பிரதமர் கதி சக்தி திட்டத்தின்கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 ரயில்வே சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.
சிறு விவசாயிகள், சிறு,குறு, நடுத்தர தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அஞ்சல் துறையுடன் இணைந்து நாடு முழுவதும் தடையற்ற பார்சல் சேவையை இலகுவாக வழங்கும் நடவடிக்கை மேலும் மேம்படுத்தப்படும்.
ஒவ்வொரு பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பிரபலமான பொருள்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் "ஒரு ரயில் நிலையம்}ஒரு பொருள்' திட்டம் அமல்படுத்தப்படும். இதன் மூலம் உள்ளூர் பொருள்கள் ரயிலில் பயணிக்கும் மக்களை எளிதில் சென்றடையும்.
தற்சார்பு இந்தியா திட்டத்தில் 2,000 கி.மீ ரயில் பாதை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச பாதுகாப்பு தரத்துடன் உருவாக்கப்படும். மெட்ரோ திட்டம் துரிதப்படுத்தப்படும். நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப ரயில்வே தனது திறனை மேம்படுத்தும் என்றார்.
ஏற்கெனவே ரயில்வே துறை 44 வந்தே பாரத் ரயில்களைத் தயாரித்து வருகிறது. இந்த ரயில்கள் 2023 ஆகஸ்ட் 15 முதல் 75 வழித் தடங்களில் இயக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஏற்கெனவே கூறியுள்ளார்.