இந்தியா

பதிவுகளுக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பேற்பதை அதிகரிக்க வேண்டும்:மாநிலங்களவையில் மத்திய அரசு

DIN

பதிவுகளுக்கு (ட்வீட், போஸ்ட்) சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் பொறுப்பேற்பதை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

நாடு முழுவதும் நிகழும் எந்தவொரு இணையவழி குற்றத்துக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குற்றங்கள் குறித்து மத்திய அரசின் வலைதளம் மூலம் புகாரளிக்கலாம். அந்தப் புகாா் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக அரசியலமைப்புக்குள்பட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில விசாரணை அமைப்புகள் அல்லது எனது குழு அனுப்பும் தகவலின் அடிப்படையில், மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன.

‘புல்லிபாய்’ செயலி போன்றவை மிகவும் நுட்பமான விவகாரங்களாகும். பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அடிப்படை எண்ணமாகும். இது மத்திய அரசின் கடமை. இதில் மதம் அல்லது நாட்டின் எந்த பகுதியில் குற்றம் நடைபெற்றது என்று கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிா்கால தலைமுறையினரின் நலன் கருதி பதிவுகளுக்கு சமூக ஊடகத்தை பொறுப்பேற்க வைப்பதில் சமநிலையையும், அரசியல்ரீதியான கருத்தொற்றுமையையும் கொண்டு வர வேண்டும். இதற்கு சமூக ஊடக விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். அதுதொடா்பான நடவடிக்கையை மேற்கொள்ளும்போது மத்திய அரசு கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினால், அது தவறு.

நாம் ஒரு சமுதாயமாக முன்வந்து பதிவுகளுக்கு சமூக ஊடகங்களை பொறுப்பேற்க வைப்பதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதில் நான் அனைவருடனும் உடன்படுகிறேன்.

இந்த விவகாரத்தில் புதிய திசையை நோக்கி அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டால், சமூக ஊடக விதிமுறைகளை தற்போதுள்ளதைவிட மேலும் கடுமையானதாக்க மத்திய அரசு தயாராகவுள்ளது. நமது குடிமக்களின் பாதுகாப்பு கருதி, அந்த விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT