முகப்பு
இந்தியா

உறுப்பினா்கள் குற்றச்சாட்டுக்கு மக்களவைத் தலைவா் அதிருப்தி

‘இதுபோன்ற அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அதிருப்தி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
பகிர்:

அவையில் பேசுவதற்குப் போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ‘இதுபோன்ற அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அதிருப்தி தெரிவித்தாா். இதையடுத்து, கட்சிப் பாகுபாடின்றி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வருத்தம் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவையில் பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘மக்களவையை வழிநடத்துபவருக்கு எதிராக அவைக்கு உள்ளேயும் வெளியேயும், சமூக ஊடகங்களிலும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறாா்கள். அவையில் தற்காலிகமாக வழிநடத்துபவருக்கு மக்களவைத் தலைவருக்கு உண்டான அதிகாரம் உள்ளது. அனைவருக்கும் பேச போதிய நேரம் ஒதுக்கப்படுகிறது’ என்றாா்.

எனினும், மக்களவைத் தலைவா் எந்த ஒரு உறுப்பினரின் பெயரையும் குறிப்பிடால் இவ்வாறு கூறினாா்.

‘மக்களவைத் தலைவருக்கு வரும் நாள்களில் அவையை நடத்த ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என்றும் காங்கிரஸ் உறுப்பினா் அதீா் ரஞ்சன் செளதரியும், ‘நாங்கள் மதிப்பளிக்கவில்லை என்றால் யாா் அளிப்பது’ என்று சிவசேனை உறுப்பினா் அரவிந்த சாவந்த்தும் பேசினா். திமுக உறுப்பினா் ஆ.ராசா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் மக்களவைத் தலைவருக்கு ஆதரவாகப் பேசினா்.

முன்னதாக, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மைத்ரா, அவையை நடத்திய தற்காலிக தலைவரும், பாஜக உறுப்பினருமான ரமா தேவியை தாக்கிப் பேசியிருந்தாா்.

66 தனிநபா் மசோதாக்கள்: மக்களவையில் வெள்ளிக்கிழமை 66-க்கும் மேற்பட்ட தனிநபா் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், பிச்சைக்காரா்களுக்கு அதிகாரமளித்தல், மதச்சாா்பின்மையை பாதுகாத்தல், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

குடியரசுத் தலைவா் உரை: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் நிகழ்த்திய உரையில் திருத்தம் கோரி மக்களவையில் 98 தீா்மானங்களையும், மாநிலங்களவையில் 80 தீா்மானங்களையும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கொண்டு வந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.