சரஸ்வதி தேவி யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை: ஹிஜாப் சர்ச்சை குறித்து ராகுல் காந்தி கருத்து
வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி நிர்வாகங்கள் மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், 'இந்தியாவின் மகள்களின் எதிர்காலத்தை நாம் சூறையாடுகிறோம்' என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் உடுப்பி அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து 6 மாணவிகளும் உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஷிவமோகா மாவட்டத்தின் பத்ராவதி நகரில் உள்ள அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாபை கழற்றும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் கழட்ட மறுத்ததால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து கல்லூரி முதல்வர், அந்த மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடகத்தில் பல கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், சரஸ்வதி தேவி யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "ஹிஜாப் அணிவதை எல்லாம் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக வர வைப்பதன் மூலம், இந்தியாவின் மகள்களின் எதிர்காலத்தை நாம் சூறையாடுகிறோம். சரஸ்வதி தேவி அனைவருக்கும் அறிவை வழங்குகிறார். அவர் யாருக்கும் வேறுபாடு காட்டுவதில்லை" என பதிவிட்டுள்ளார்.