எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்துமுடிக்கக் கோரி மனு: விரைவில் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விரைவில் விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விரைவில் விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினா்கள் ஆகியோருக்கு எதிராக மொத்தம் 4,984 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 1,899 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் நிலவரப்படி 4,110 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதன்பிறகு 2,775 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு விட்டாலும் 4,984 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது நாடாளுமன்றத்தையும், சட்டப்பேரவைகளையும் குற்றப் பின்னணி கொண்டவா்கள் அதிகம் ஆக்கிரமித்திருக்கிறாா்கள் என்பதையே காட்டுகிறது.
எனவே, முன்னாள், இந்நாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கு உரிய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் பிற விசாரணை அமைப்புகளின் விசாரணயையும் விரைவுபடுத்த வேண்டியுள்ளது. இந்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று அவா் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, இந்த மனுவை விரைவில் விசாரிப்பதற்கு நீதிபதிகள் ஒப்புக்கொண்டனா்.