இந்தியா

மாணவிகளுக்கு 19 தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனங்கள்: மக்களவையில் அமைச்சர் தகவல்

 நமது நிருபர்

சமூக அதிகாரமளித்தல், பொருளாதார மேம்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்த மாணவிகளின் திறன் மேம்பாட்டுக்கு 19 தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனங்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாக மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் தெரிவித்தார்.
 மாணவிகளின் திறனை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
 இதற்கு கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதில்:
 அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் திறனை மேம்படுத்தவும், பள்ளிக் குழந்தைகளுக்கான "சமக்ரா சிக்சா' திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வியுடன் விவசாயம், ஆடை தயாரித்தல், அழகு சாதனக் கல்வி, சுற்றுலா, கட்டுமானத் துறைப் பணிகள் போன்றவை பற்றிய தொழில் கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது.
 கடந்த 2021, மார்ச் வரையில் 11,710 பள்ளிகளில், 8.16 லட்சம் மாணவிகள் உள்பட 15 லட்சம் குழந்தைகள் இதில் பயன் பெற்றுள்ளனர்.
 மேலும், திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மாணவிகளின் திறனை மேம்படுத்தி, பொருளாதாரத்தைப் பெருக்கும் வகையில், பிரதம மந்திரி கெளசல் விகாஸ் யோஜனா, ஜன் சிக்சா சன்ஸ்தான், தொழில் கல்வி பயிற்சித் திட்டம் போன்றவை வழங்கப்படுகின்றன.
 இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு போக்குவரத்துச் செலவு, உணவு, தங்கும் வசதி ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன. 14,604 தொழில்பயிற்சி நிறுவனங்களில் 30 சதவீத இடஒதுக்கீடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் 19 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள், மாணவிகளுக்காக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. தன்னாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்தவும் ஜன் சிக்சான் சன்ஸ்தான் அமைப்பின் மூலம் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவிகளுக்கு 14 வயதிலிருந்து 45 வயது வரையுள்ளவர்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்த வகையில் கடந்த 2020-21-ஆம் ஆண்டில் 79 சதவீத பெண்கள் பயனடைந்துள்ளனர் என கல்வித் துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
 மனிதக் கழிவுகளைக் கையாளத் தடை: மனிதக் கழிவுகளை, மனிதர்களே கையாளும் இழிநிலையை மாற்ற, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த திமுக உறுப்பினர் டி.ஆர் பாலுவின் மற்றொரு கேள்விக்கு மத்திய சமூக நீதித் துறையின் இணையமைச்சர், ராம்தாஸ் அதாவலே பதில் அளித்தார்.
 அதில் அவர் கூறியுள்ளதாவது:
 மனிதக் கழிவு அகற்றுவோர் மறுவாழ்வுச் சட்டம் 2013-இன்படி, மனிதக் கழிவுகளை, மனிதர்களே கையாள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்களுக்கு நிவாரணத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 40,000 வரை உதவித் தொகை, குழந்தைகளின் திறனை மேம்படுத்த, மாதம் ரூ. 3,000 யுடன் பயிற்சி, பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT