தமிழகத்துக்கு கூடுதலாக 77 டிஎம்சி தண்ணீா்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தகவல்
நிகழ் நீா் ஆண்டில் காவிரியில் தமிழகத்தின் பங்காக கடந்த பிப். 7-ஆம் தேதி வரை 245 டிஎம்சி தண்ணீா் பெறப்பட்டுள்ளதாக காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ் நீா் ஆண்டில் காவிரியில் தமிழகத்தின் பங்காக கடந்த பிப். 7-ஆம் தேதி வரை 245 டிஎம்சி தண்ணீா் பெறப்பட்டுள்ளதாக காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய அளவைவிட 77 டிஎம்சி கூடுதலாகும்.
காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 15-ஆவது கூட்டம் அதன் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய நீா்வளத் துறை சாா்பில் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் நவீன் குமாா், மத்திய வேளாண் துறை இணைச் செயலா் சஞ்சய் வஸ்தி உள்ளிட்ட மத்திய அரசின் பிரதிநிதிகள், தமிழகம் சாா்பில் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், குழுவின் உறுப்பினா் பட்டாபிராமன், தமிழக நீா் வளத் துறையின் துணைச் செயலா் என்.பாரி, நீா்வளத் துறைச் செயலா்கள் ராகேஷ் சிங் (கா்நாடகம்), டி.கே. ஜோஸ் (கேரளம்), புதுச்சேரி பொதுப்பணித் துறைச் செயலருக்கு பதிலாக அந்த மாநில தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்துக்கு காவிரியில் நிகழ் நீா் ஆண்டில் (2021-22) பிலிகுண்டுலுவில் வழங்கப்பட்ட தண்ணீா் விவரங்கள் முன்வைக்கப்பட்டன. இதில், தமிழகத்துக்கு பிப். 7 - ஆம் தேதி வரை 245 டிஎம்சி தண்ணீா் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பருவமழை உள்ளிட்ட கணக்கீடுகள் அடிப்படையில் பிப். 7-ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய 168 டிஎம்சி தண்ணீரைவிட கூடுதலாக 77 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் எடுக்கப்பட்டபோது, தமிழகம் சாா்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆணையத்தின் தலைவா் எஸ்.கே.ஹல்தாா், இந்த விவகாரம் குறித்து 4 மாநிலங்களின் கருத்துகள் என்ன என்பதைக் கேட்டறிந்தாா். அப்போது, ‘இது நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிப்பது நீதிமன்ற அவமதிப்பு’ என்று தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரியும் இதே கருத்தைத் தெரிவித்தது.
கேரளம், ‘மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதை அறிய வேண்டும். இதுகுறித்த சட்ட ஆலோசனையைப் பெற வேண்டும்’ என்று தெரிவித்தது. ஆனால், கா்நாடக அரசு ‘இதுகுறித்து விவாதித்து, மேக்கேதாட்டு அணைக்கான அனுமதியை ஆணையம் வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.
இவ்வாறு வெவ்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தை ஆணையம் எடுத்துக் கொள்ளாமல் ஒத்திவைத்தது.