முகப்பு
இந்தியா

ஹிஜாப் அணிவது குறித்து விரைந்து விசாரிக்கக் கோரிய மனு; உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது குறித்து முடிவெடுக்கும் வரை மதம் சார்ந்த உடைகளை அணிவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

நாடு முழுவதும் ஹிஜாப் விவகாரம் பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில், இதுகுறித்து விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. 'இந்த விவகாரத்தில் தக்க நேரத்தில் தலையிடுவோம்' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது குறித்து முடிவெடுக்கும் வரை மதம் சார்ந்த உடைகள் அணிவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, கர்நாடகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, "இதை தேசிய அளவில் எடுத்து செல்ல வேண்டாம். உரிய நேரத்தில்  தலையிடுவோம்" என்றார். 

இந்த விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கூடியவை என்றும் ஹிஜாப் மற்றும் தலையை மறைக்கும் தாவணியை கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் அணிந்துவருகின்றனர் என்றும் மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதம் மேற்கொண்டார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "தயவுசெய்து இதை பெரிய அளவில் பரப்ப வேண்டாம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். யோசித்துப் பாருங்கள், இவற்றை தில்லிக்கு கொண்டு வருவது முறையா? தேசிய அளவில்? தவறு நடந்திருந்தால் பாதுகாப்போம்" என்றார்.

வகுப்பறைகளில் ஹிஜாப் அணியும் விவகாரம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இந்த வாரம் மூடப்பட்டது. உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர், ஹிஜாப் அணிய தடைவிதித்த மாநிலத்தின் பிற கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். 

இதுகுறித்து வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →