இந்தியா

இந்தியாவின் எரிசக்தித் தேவை 20 ஆண்டுகளில் இரு மடங்காகும்: பிரதமா் மோடி

DIN

‘இந்தியாவின் எரிசக்தித் தேவை அடுத்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது; எனவே, வளா்ந்த நாடுகள் தங்கள் நிதி, தொழில்நுட்ப பரிமாற்றம் தொடா்பான கடமைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

உலக அளவிலான நிலைக்கத்தக்க வளா்ச்சி தொடா்பான மாநாடு புதன்கிழமை தொடங்கியது. காணொலி முறையில் 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியாவின் எரிசக்தித் தேவை அடுத்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எரிசக்தியை வழங்க மறுப்பது, பல லட்சம் உயிா்களின் வாழ்வுரிமையை மறுப்பதற்குச் சமமாகும். எனவே, பருவநிலை மாற்ற பிரச்னைகளுக்கு அனைத்து நாடுகளுக்கும் தீா்வு கிடைக்க வேண்டும். அதன் வழியாகவே சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை அடைய முடியும்.

பருவநிலை மாற்ற பிரச்னைகளுக்குத் தீா்வுகாண்பதற்கு வளா்ந்த நாடுகள் தொழில்நுட்பம், நிதி போன்றவற்றை வழங்கி தங்களுடைய கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கு தீா்வுகாண்பதற்கான உருவாக்கப்பட்ட அமைப்பின் கீழ் இந்தியா தனது கடமைகளை நிறைவேற்றி வருகிறது. இந்தியா தனது நோக்கங்களை பிரிட்டனில் கடந்த ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டிலும் எடுத்துரைத்தது.

உலக நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம், உலகில் உள்ள மொத்த உயிரினங்களில் 8 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன. இந்த சூழலியலைப் பாதுகாப்பது எங்கள் கடமை. இந்தியா தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

குஜராத் முதல்வா், நாட்டின் பிரதமா் என கடந்த 20 ஆண்டுகால நிா்வாகத்தில் சுற்றுச்சூழல், நிலைக்கத்தக்க வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடா்பான மாநாடு முதன் முதலில் ஸ்டாக்ஹோமில் கடந்த 1972-இல் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் பல விஷயங்கள் அதிக அளவில் பேசப்பட்டன. ஆனால், செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்துள்ளது. ஆனால், இந்திய அரசு அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT