இந்தியா

காஷ்மீர் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நிறைவேற்றிய ராணுவம்

DIN

'ராணுவ ஹெச்பிசிஎல் காஷ்மீர் சூப்பர் 50' திட்டத்தின் மூலம் வடக்கு காஷ்மீரில் உள்ள மாணவர்களை எந்த வித கட்டணமும் இன்றி மருத்துவ போட்டி தேர்வுகளுக்கு ராணுவம் தயார் செய்துவருகிறது. அதுமட்டுமின்றி, சிறந்த மருத்துவ கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் மாணவர்களுக்கு நிதியுதவியும் செய்துவருகிறது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். ஸ்லாரியா, "பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்து வருவது உள்பட தற்போதுள்ள அளவுருக்கள் மேம்பட்டு வருவதால் வடக்கு காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலையை நோக்கி நகர்கிறது.

வடக்கு காஷ்மீரில் பாதுகாப்பு நிலை சீராக உள்ளது. இயல்பு நிலையை நோக்கி நகர்கிறது. நீங்கள் அளவுகோல்களைப் பார்த்தால், பல நேர்மறைகள் உள்ளன. பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து வருகின்றன. கடையடைப்பு சம்பவங்கள் குறைந்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலாத்துறை மேம்பட்டுள்ளது.

மேலும் அதிகமான மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் ஹீரோக்களை நன்றாக தேர்வு செய்ய வேண்டும். அவர்களை நல்ல முறையில் தேர்ந்தெடுத்தால், அவர்கள் சரியான பாதையில் செல்வார்கள்" என்றார்.

ராணுவம் நடத்திவரும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிந்துவரும் வஹீத் பாரூக், இந்த திட்டம் குறித்து பேசுகையில், "ராணுவத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக 30 ஆண் குழந்தைகளும் 20 பெண்களும் இலவசமாக பயிற்சி பெற்று வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். 

ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பயிற்சித் திட்டத்திற்கான மாணவர்களைத் தேர்வுசெய்ய எழுத்துத் தேர்வுகளை நடத்தினோம். 2018ஆம் ஆண்டில், நாங்கள் 30 மாணவர்களை தேர்வு செய்தோம். அதில் 25 பேர் மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 

இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டில் சூப்பர் 30லிருந்து சூப்பர் 50 ஆக மாற்றப்பட்டது, அதன் பிறகு சிறுமிகளும் சேர்க்கப்பட்டனர். எங்களிடம் 30 ஆண்களும், 20 பெண்களும் கல்வி பயின்று பெறுகின்றனர். அவர்களின் லட்சியத்தைத் தொடர அவர்களுக்கு இலவசமாக வசதிகள் செய்து தரப்படுகின்றன. எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்தவுடன் ராணுவம் அதற்கான கட்டணத்தை நிதியுதவியாக அளித்துவருகிறது" என்றார்.

இதுகுறித்து பயிற்சி நிறுவனத்தின் மற்றொரு ஆசிரியரான அனுப்ரீதா சாண்டில்யா கூறுகையில், "சிறுவர்கள் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை முதல் இங்கு கற்பித்து வருகிறோம். மாணவர்கள் வரும்போது, ​​அடிப்படை பாடங்களில் தொடங்கி படிப்படியாக பாடங்களை எடுத்துச் செல்கிறோம். 

எந்த ஏரியாவில் இருந்து வந்தாலும் அவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட விரும்புவது உண்மையிலேயே ஆச்சரியம்தான். 100 சதவீத வெற்றியை ஆண்கள் பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் பெண்களும் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

ராணுவம் நடத்தும் பயற்சி நிறுவனத்தில் பயின்றுவரும் ஹக்கிமா என்ற மாணவர், இதுகுறித்து கூறுகையில், "பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களுக்குப் பிறகு நடைபெறும். இங்கு படிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. 

12ஆம் வகுப்புக்குப் பிறகு இந்தப் பயிற்சி மையத்தைப் பற்றித் தெரிந்துகொண்டேன். நுழைவுத் தேர்வுக்குப் பிறகு ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். நேர்காணல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இங்கு வசதிகள் நன்றாக உள்ளன. பெரிய நகரங்களில் விலையுயர்ந்த பயிற்சி நிறுவனங்களில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு இந்த பயிற்சி நிறுவனம் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது" என்றார்.

இங்கு படிக்கும் மற்றொரு மாணவரான முகமது இம்ரான் இதுகுறித்து கூறுகையில், "ஆசிரியர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சி நிறுவனத்தில் இருந்து நான் நிறையப் பயனடைகிறேன். இங்கு தங்கும் விடுதிகள் உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன. ஆசிரியர்களுடன் நேருக்கு நேர் தொடர்பு கொள்கிறோம். 

நகரங்களில் மருத்துவப் பயிற்சிக்கு கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ராணுவம் எங்களுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது. நாங்கள் நிறைய பயனடைகிறோம். நான் ரஜோரியைச் சேர்ந்தவன். . மொபைல் போன்கள் இங்கு அனுமதிக்கப்படவில்லை, இது ஒரு நல்ல விஷயம். எங்கள் சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்து வைக்கிறார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT