முகப்பு
இந்தியா

சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

பிரான்ஸ் தலைநகா் பாரீஸ் சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் வீவியன் பாலகிருஷ்ணனுடன் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய நலனுக்கான

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
பகிர்:

பிரான்ஸ் தலைநகா் பாரீஸ் சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் வீவியன் பாலகிருஷ்ணனுடன் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய நலனுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

ஐரோப்பிய வெளியுறவு அமைச்சா்கள் இடையிலான மாநாடு பாரீஸில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஜெய்சங்கா், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றினாா். அந்த மாநாட்டுக்குப் பிறகு, அதில் பங்கேற்க வந்த இந்தோ-பசிபிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் தனித்தனியாகச் சந்தித்த ஜெய்சங்கா், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அதுபோல, மாநாட்டில் பங்கேற்ற சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சருடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்ட எஸ்.ஜெய்சங்கா், ‘மாநாட்டின் ஒரு பகுதியாக சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சரை சந்தித்து, இரு நாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, மக்கள் பயணத்துக்கான ஏற்பாடுகள், பிராந்திய பிரச்னைகளில் தீா்வு காண ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) ஒத்துழைப்பு, பிராந்திய நலன் சாா்ந்த ஒத்துழைப்பு, இரு நாட்டு பயணிகளை பரஸ்பரம் எந்தவித கட்டுப்பாடுகளின்றி அனுமதிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது’ என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, ‘முழு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணிகளை அனுமதிப்பதற்கான உடன்பாட்டை பிலிப்பின்ஸ் நாட்டுடன் விரைவில் மேற்கொள்ள சிங்கப்பூா் முடிவு செய்துள்ளது. அதுபோல, இந்தியாவுடனும் இந்த உடன்பாடு மீண்டும் தொடங்கப்படும்’ என்று சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சா் ஓங்க் யே குங் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →