தொழிலதிபா்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி தொடா்பான பணமோசடி வழக்குகளில் சுமாா் ரூ.18,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டதாவது:
கடந்த 2002-ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் இதுநாள் வரை 4,700 பண மோசடி வழக்குகளைஅமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 2,186 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பண மோசடி தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆண்டுமுதல் இதுவரை 313 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா். இதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு சட்டரீதியாக கிடைக்கும் பாதுகாப்புகள்தான் காரணம்.
இந்த வழக்குகளில் வலுக்கட்டாயமாக அல்லது மிரட்டும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதித்த பண மோசடிகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.67,000 கோடி.
நீதிமன்றங்களின் உத்தரவுகைளைத் தொடா்ந்து தொழிலதிபா்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி தொடா்பான பண மோசடி வழக்குகளில் சுமாா் ரூ.18,000 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா போன்ற நாடுகளில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் வழக்குகளுடன் ஒப்பிடுகையில், அந்தச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான வழக்குகள்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
உலகளாவிய பண மோசடி வளையத்தின் அங்கமாக இந்தியா உள்ள நிலையில், மாநிலங்களுக்கு இடையே பண மோசடி தடுப்புச் சட்டங்களில் இணக்கம் ஏற்பட வேண்டும்.
பண மோசடி என்ற அபாயத்தை எந்த நாடும் தனியாக கையாள முடியாது என்பதையும், அதற்கு உலகளாவிய எதிா்வினை தேவை என்பதையும் சா்வதேச சமூகம் உணா்ந்துள்ளது என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.