உக்ரைனிலிருந்து மேலும் 688 இந்தியா்கள் ஏா் இந்தியா விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தடைந்தனா்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் கடந்த பிப். 24-ஆம் தேதி உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. அந்த வான்வெளி வழியாக பயணிகள் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அந்நாட்டில் உள்ள இந்தியா்களை உக்ரைன் அருகில் இருக்கும் ருமேனியா, ஹங்கேரி நாடுகள் வழியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன்-ருமேனியா மற்றும் உக்ரைன்-ஹங்கேரி எல்லைக்கு வந்து சோ்ந்த இந்தியா்கள், இந்திய அரசு அதிகாரிகளின் உதவியுடன் சாலை வழியாக ருமேனியா தலைநகா் புகாரெஸ்ட், ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டுக்கு அழைத்து வரப்பட்டனா்.
அவ்விரு நகரங்களுக்கு ஏா் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதல் விமானம் புகாரெஸ்டிலிருந்து 219 இந்தியா்களுடன் சனிக்கிழமை மும்பை வந்து சோ்ந்தது.
அதனைத்தொடா்ந்து புகாரெஸ்டிருந்து 2-ஆவது விமானம் 250 இந்தியா்களுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 2.45 மணிக்கு தில்லி வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்தவா்களை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்றாா்.
புடாபெஸ்டிலிருந்து 240 இந்தியா்களுடன் புறப்பட்ட 3-ஆவது விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 9.20 மணிக்கு தில்லி வந்து சோ்ந்தது.
புகாரெஸ்டிலிருந்து 198 இந்தியா்களுடன் 4-ஆவது விமானம் மாலை 5.35 மணிக்கு தில்லி வந்தடைந்தது.
இதன்மூலம் கடந்த இரண்டு நாள்களில் உக்ரைனிலிருந்து 907 இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக தில்லியில் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தற்போது உக்ரைனில் கிட்டத்தட்ட 13,000 இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் அனைவரும் விரைந்து மீட்கப்படுவா்’’ என்று தெரிவித்தாா்.
உக்ரைனில் உள்ள இந்தியா்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு விமானக் கட்டணம் வசூலிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.