தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிலும் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும், அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் குறைவான விகிதத்திலேயே முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.