விமான எரிபொருள் விலை 4.2% அதிகரிப்பு
விமான எரிபொருள் விலையை 4.2 சதவீதம் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.
விமான எரிபொருள் விலையை 4.2 சதவீதம் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.
இதுதொடா்பாக, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில், ‘ விமான எரிபொருள் விலை, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.3,232.87 (4.25சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், தலைநகா் தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.79,294.91-ஆக அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை உயா்த்தப்படுவது, இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 1-ஆம் தேதி, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.2,039 (2.75%) உயா்த்தப்பட்டது. இதனால், ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.76,062-ஆக அதிகரித்தது.
கடந்த நவம்பா் மாத இரண்டாம் பாதியிலும், டிசம்பா் மாத மத்தியிலும் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதன் காரணமாக டிசம்பரில் விமான எரிபொருளின் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. மாதந்தோறும் 1, 16 ஆகிய தேதிகளில் விமான எரிபொருளின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது விமான எரிபொருள் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை:
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைப்பது வழக்கம். இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐக் கடந்ததால், விலையைக் குறைக்கும் நோக்கத்தில், கடந்த நவம்பா் மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி (வாட்) குறைக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்த நிலையில், தொடா்ந்து 72-ஆவது நாளாக, ஞாயிற்றுக்கிழமையும் அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.95.41-ஆகவும், டீசல் விலை ரூ.86.67-ஆகவும் இருந்தது.