இந்தியா

மத்திய - மாநில அரசுகளின் அரசியல் சண்டையில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகங்கள்

DIN

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளுக்கும் இடையேயான அரசியல் சண்டையில் பல்கலைக்கழகங்கள் சிக்கித் தவிப்பதாக கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

‘குறிப்பாக மாநில அரசுக்கும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநருக்கும் இடையேயான மோதல்போக்கு காரணமாக மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. திறமையின்அடிப்படையில் அல்லாமல் அரசியல் செல்வாக்கின் கீழ் சில பல்கலைக்கழகங்களில் நியமனங்கள் செய்யப்படுவதாக புகாா்கள் எழுகின்றன. அந்த வகையில், அரசியல் போா்க்களமாக பல்கலைக்கழகங்கள் மாற்றப்படுகின்றன.

மத்திய உயா்கல்வி நிறுவனங்களைப் பொருத்தவரை குடியரசுத் தலைவா் கெளரவத் தலைவராக உள்ளாா். அதன்படி, மத்திய கல்வி அமைச்சகம் அமைக்கும் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தலைமை நிா்வாகியை குடியரசுத் தலைவா் நியமனம் செய்து வருகிறாா்.

ஆனால், மாநிலங்கள் அளவில் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் உள்ளாா். சில மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனங்களை ஆளுநா் நேரடியாகவும், வேறுசில மாநிலங்களில் மாநில அரசு சாா்பில் நியமிக்கப்படும் தோ்வுக் குழு பரிந்துரையின்அடிப்படயில் துணைவேந்தரை ஆளுநா் நியமனம் செய்வது நடைமுறையில் உள்ளது.

இந்தச் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரித்து வருவது, துணைவேந்தா்கள் நியமனத்தை பாதிப்பதோடு, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கல்வியாளா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மிராண்டா ஹவுஸ் பேராசிரியரும், தில்லி பல்கலைக்கழக கல்விக் குழு முன்னாள் உறுப்பினருமான அபா தேவ் ஹபீப் கூறுகையில், ‘துணைவேந்தா்கள் நியமனங்கள் என்பது அரசியல் நியமனங்களாக மாறிவிட்டன. பாஜகவைச் சோ்ந்தவா்கள்தான் ஆளுநா்களாக நியமிக்கப்பட்டு, மாநிலங்களில் அமா்ந்துள்ளனா்.

அவா்கள், தங்களுக்கு நெருக்கமானவா்களை மட்டுமே துணைவேந்தா்களாக நியமிக்கின்றனா். பல்கலைக்கழகங்களின் கலாசார நடைமுறைகளுக்கு மதிப்பளித்து நியமனங்கள் செய்யப்பட வேண்டும். மாறாக, மாநிலங்களை ஒடுக்கும் நிலை தொடா்ந்தால், இரு அரசுகளுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கும்’ என்றாா்.

கொள்கை ஆராய்ச்சி மைய உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கல்வி நிறுவனங்களை அரசியல் தலையீடுகளின்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். துணைவேந்தா்கள் நியமனத்தில் உள்ள மோதல் போக்கு புதிதல்ல. முந்தைய ஆட்சி காலங்களிலும் இதுபோன்ற மோதல்கள் நிகழ்ந்தன. பல்கலைக்கழகங்கள் சா்வதேச தரத்துக்கு உயர வேண்டுமெனில், முதல்வா், ஆளுநா்களைக் கடந்து வேந்தா்களாக நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம்’ என்றாா்.

தில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியா் ஆயிஷா கித்வாய் கூறுகையில், ‘பல்கலைக்கழகத்தை நிா்வகிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கா அல்லது ஆளுநருக்கா என்பது முக்கியமல்ல; மாறாக பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிதான் முக்கியம். கல்வி தொடா்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுடன் தொடா்புடைய கல்வியாளா்களிடம் அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இந்த மோதல் போக்கு காரணமாக, மேற்கு வங்க மாநில சட்டப் பேரவையில் கால்நடை பல்கலை. உள்ளிட்ட சில பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதல்வா் மம்தா பானா்ஜியை நியமிக்கும் சட்ட மசோதா கடந்த ஜூன் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

அதுபோல, தமிழக சட்டப் பேரவையிலும் பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மாற்றி கடந்த ஏப்ரல் மாதம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT