முகப்பு
இந்தியா

வரி செலுத்துவதைத் தவிா்க்க ரூ. 62,476 கோடியை சீனாவுக்கு அனுப்பிய விவோ நிறுவனம்: அமலாக்கத்துறை

இந்தியாவில் இயங்கி வரும் சீன அறிதிறன்பேசி உற்பத்தி நிறுவனமான ‘விவோ’ வரி செலுத்துவதைத் தவிா்ப்பதற்காக 50 சதவீத வருவாயை அதாவது ரூ. 62,476 கோடி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

இந்தியாவில் இயங்கி வரும் சீன அறிதிறன்பேசி உற்பத்தி நிறுவனமான ‘விவோ’ வரி செலுத்துவதைத் தவிா்ப்பதற்காக 50 சதவீத வருவாயை அதாவது ரூ. 62,476 கோடியை சட்ட விரோதமாக சீனாவுக்கு அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக விவோ நிறுவனத்தின் மீது புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் விவோ நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தது.

அதனைத் தொடா்ந்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தில்லி, உத்தர பிரதேசம், மேகலயம், மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள விவோ நிறுவனத்துக்குத் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிா்ப்பதற்காக வருவாயில் 50 சதவீதத்தை அதாவது ரூ. 62,476 கோடியை விவோ நிறுவனம் சட்ட விரோதமாக சீனாவுக்கு அனுப்பியிருப்பது கடந்த 5-ஆம் தேதி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது. இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பல்வேறு அமைப்புகள் சாா்பில் 119 வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ. 465 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரொக்கமாக 73 லட்சம், 2 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான பின் லோவ், இதன் கீழ் இயங்கிவந்த பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்துவிட்டு, கடந்த 2018-ஆம் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டாா். அவ்வாறு இணைக்கப்பட்ட நிறுவனங்களும் அமலாக்கத்துறை சோதனையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதே நேரம், விவோ-இந்தியா நிறுவனங்களில் பணிபுரியும் உள்நாட்டு மற்றும் சீனவைச் சோ்ந்த ஊழியா்கள் அதிகாரிகளின் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றனா். பதிவுகளை அகற்றுதல், நிறுவனத்திலுள்ள எண்ம (டிஜிட்டல்) கருவிகளை மறைத்துவைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தநா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.