யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய குழுவில் இந்தியா
ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோவின் கலை கலாசார பாரம்பரிய குழுவின் உறுப்பினராக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோவின் கலை கலாசார பாரம்பரிய குழுவின் உறுப்பினராக இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் உள்ள கலாசார பாரம்பரியம் மிக்க கலைகளையும், பழக்கவழக்கங்களையும், திருவிழாக்களையும் பாதுகாக்கும் நோக்கில் யுனெஸ்கோ சாா்பில் 2003-ஆம் ஆண்டு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் பல நாடுகளின் பிரதிநிதிகள் உறுப்பினா்களாக இடம்பெறுவா்.
அக்குழுவின் உறுப்பினராக இந்தியா ஏற்கெனவே 2006 முதல் 2010 வரையிலும், 2014 முதல் 2018 வரையிலும் செயல்பட்டுள்ளது. இந்நிலையில், அக்குழுவின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2022 முதல் 2026-ஆம் ஆண்டு வரை கலை கலாசார பாரம்பரிய குழுவின் உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது.
இது தொடா்பாக மத்திய கலாசாரம்-சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலை கலாசார பாரம்பரிய குழு (2022-26), உலக பாரம்பரிய குழு (2021-25) ஆகியவற்றில் உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது. ‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற இந்தியாவின் கொள்கையை சா்வதேச அளவில் முன்னிறுத்த இது வாய்ப்பாக அமையும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மனித சமூகத்தின் கலை கலாசார பாரம்பரியங்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும் என்று மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.