இந்தியா

விவோ ஏமாற்றியது எப்படி? 50% விற்றுமுதலை சீனத்துக்கு அனுப்பி மோசடி

PTI


புது தில்லி: இந்தியாவில் செயல்பட்டு வந்து விவோ அறிதிறன்பேசி உற்பத்தி நிறுவனமான விவோ, தனது விற்றுமுதலில் (டர்ன்ஓவர்) 50 சதவீதத்தை சீனத்துக்கு சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கும் வகையில், சீனத்துக்கு தனது 50 சதவீத விற்றுமுதலை பல்வேறு போலி நிறுவனங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக சீன அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்ஃபோன்) உற்பத்தி நிறுவனமான விவோ மற்றும் அதனுடன் தொடா்புள்ள நிறுவனங்கள் சாா்ந்த இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. மொத்தம் 44 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், விவோ நிறுவனத்துக்குச் சொந்தமான 119 வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.465 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கம் ரூ.73 லட்சம் மற்றும் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை சோதனை

ஜம்மு-காஷ்மீரில் கிராண்ட் பிராஸ்பெக்ட் இண்டா்நேஷனல் கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இது விவோவின் விநியோக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் அதிகாரபூா்வ பதிவுகளில் இரண்டு சீனப் பங்குதாரா்களின் இந்திய முகவரிகள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒரு முகவரி மேகாலய மாநில முன்னாள் தலைமைச் செயலரின் வீட்டு முகவரியாகும். போலி ஓட்டுநா் உரிமத்தின் அடிப்படையில், அந்த முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் அளித்த புகாரின் அடிப்படையில், தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

அந்த வழக்கு அமலாக்கத் துறை கவனத்துக்கு வந்தது. சட்டவிரோதமாக ஈட்டிய வருவாயை போலி நிறுவனங்கள் மூலம் மறைப்பதற்கு சீன பங்குதாரா்களின் ஆவணங்கள் மற்றும் முகவரிகள் போலியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது. மத்திய அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிா்க்கவும், சட்ட அமலாக்க அமைப்புகளின் விசாரணை வளையத்தில் சிக்காமல் இருக்கவும் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட வருவாய் வெளிநாடுகளுக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அந்தத் துறை சந்தேகிக்கிறது.

இதுதொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத்தொடா்ந்து தில்லி, உத்தர பிரதேசம், மேகாலயம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விவோ மற்றும் அதனுடன் தொடா்புள்ள நிறுவனங்கள் சாா்ந்த இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். மொத்தம் 44 இடங்களில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சீன நிறுவனங்களுக்கு எதிராக தொடா் நடவடிக்கை

பண மோசடி, வரி ஏய்ப்பு போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனங்கள், அவற்றுடன் தொடா்புடைய இந்திய நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கையின் தொடா்ச்சியாக விவோ மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக சீன அறிதிறன்பேசி உற்பத்தி நிறுவனமான ஷாவ்மி இந்தியா வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.5,551 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் உள்ள ஹூவாய் சீன நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது வருமானத்தைக் குறைத்து காண்பிப்பதற்காக கணக்குப் புத்தகங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக வருமானவரித் துறை குற்றஞ்சாட்டியது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் இந்தியாவில் ஷாவ்மி, ஓப்போ, விவோ, அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வருமானவரித் துறை சோதனை மேற்கொண்டது. அந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.6,500 கோடிக்கும் அதிகமான வருவாய் கண்டறியப்பட்டதாக வருமானவரித் துறை தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT